தமிழ் பேசும் இனங்களின் அரசியல் உரிமைகளை வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பும் ஆவணத்தில் அனைத்து தமிழ் பேசும் தரப்புக்களும் பங்கேற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழ் கட்சிகளினால் நேற்று மேற்கொள்ளப்பட் வரைபு திருத்தத்தின் பின்னர் இந்த புதிய சூழல் எழுந்துள்ளது.
தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வாக சமஸ்டி அடிப்படையிலான இறுதி தீர்வை வலியுறுத்தியும், அதுவரையிலும் – இடைக்கால ஏற்பாடாக – 13 ஆவது திருத்தத்தை உடனடியாக அமுலப்படுத்த வலிறுத்தி தமிழ் பேசும் கட்சிகளினால், இந்திய பிரதமரிடம் கடிதமொன்றை சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டு, அதற்கான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டன.
அந்த முயற்சியில் சில கட்சிகள் கையெழுத்திடாமல் விடலாம் என்ற சூழல் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், புதிய நிலைவரத்தை கையாள இரா.சம்பந்தனின் வீட்டில் நேற்று முன்தினமும், க.வி.விக்னேஸ்வரனின் வீட்டில் கடந்த 30 ஆம் திகதியும் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
இதன் தொடர்ச்சியாக நேற்று – புதுவருட தினத்தில் தமிழ் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் கூடி, ஏற்கனவே இறுதி செய்யப்பட்ட வரைபில் சில திருத்தங்களை மேற்கொண்டனர்.
இந்தவரைபு ஏற்பாட்டாளர் தரப்பில் ரெலோவினால் நேற்று மாலை இரா.சம்பந்தன், க.வி.விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், என்.சிறிகாந்தா ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏனைய கட்சிகளின் தலைவர்களின் சம்மதம் கிடைத்ததும், இன்று அல்லது நாளை அளவில் அனைத்து தரப்பினரும் கையெழுத்திடலாம் என தெரிகிறது.