சீனாவின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனையான பெங் சூவாய் (வயது 35). அந்த நாட்டின் முன்னாள் துணைப்பிரதமரும், ஆளும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களில் ஒருவருமான ஜாங் கோலி மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார்.
பெங் சூவாய் சமூக வலைத்தளத்தில் இந்த குற்றச்சாட்டை வெளியிட்ட நாள் முதல் அவர் மாயமானார். அவர் எங்கு இருக்கிறார்? என்ன ஆனார்? என எந்த தகவலும் இல்லை. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஜாங் கோலி, அதிபர் ஜின்பிங்குக்கு மிகவும் நெருக்கமானவர் என்று தெரிகிறது.
இதனால் பெங் சூவாய் மாயமானதன் பின்னணியில் சீன அரசு இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில் மயமான டென்னிஸ் வீராங்கனை பெங் சூவாய் நலமுடன் இருப்பதை உறுதி செய்யும் ஆதராத்தை சீனா வழங்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி இதுபற்றி கூறுகையில் ‘‘ஜோ பைடனின் நிர்வாகம், பெங் சூவாய் எங்கு, எப்படி இருக்கிறார் என்பதற்கான ‘‘சுதந்திரமான, சரிபார்க்கக்கூடிய ஆதாரத்தை’’ சீனா வழங்க வேண்டும் என்று விரும்புவதோடு, டென்னிஸ் வீராங்கனை குறித்து ஆழ்ந்த கவலையையும் வெளிப்படுகிறது” என்றார்.