இளைஞர் ஒருவரை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்தமை தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரான ரன்மல் கொடித்துவக்குவுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலர், இதனை பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரண்மல் கொடித்துவக்கு உள்ளிட்ட இருவர், இளைஞர் ஒருவரை தாக்கும் வகையிலான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் அதனை மையப்படுத்தி பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது.
அதன்படி சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த ரண்மல் கொடித்துவக்கு, அங்கிருந்து இடமாற்றப்பட்டு பொலிஸ் வைத்திய மற்றும் நலன்புரி பிரிவுக்கு நியமிக்கப்பட்டார்.
எவ்வாறாயினும் அதன் பின்னர், அந்த இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிரிஎல்ல பொலிஸ் நிலைய அறையொன்றில் அவர் நிர்வாணப்படுத்தப்பட்டு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரால் சித்திரவதை செய்யப்பட்டதாக தற்போது சுட்டிக்காட்டப்பட்டே விசாரணைகள் கோரப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்யப்பட்டமை குறித்து விசாரிக்க பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.