விவசாயத்துக்கு உடனடியாக உரத்தை வழங்கக் கோரியும், அரசாங்கத்தின் செயற்பாட்டைக் கண்டித்தும், மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில், உயிலங்குளம் பகுதியில் கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 174 கமக்கார அமைப்புகளை உள்ளடக்கிய மன்னார் மாவட்ட விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில், (25/10) காலை 10.30 மணியளவில் குறித்த கண்டன போராட்டம் இடம்பெற்றது.
மன்னார்-மதவாச்சி பிரதான வீதியில், உயிலங்குளம் சந்தியில் ஆரம்பமான ஊர்வலம் உயிலங்குளம்- மன்னார் வீதியில் அமைந்துள்ள உயிலங்குளம் கமநல சேவைகள் நிலையம் வரை சென்று நிறைவடைந்துள்ளது.
இந்த ஊர்வலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், வினோ நோகராதலிங்கம் , மன்னார் நகர சபை முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி, உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள்,விவசாயிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.