வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சின் துறைசார் மேற்பார்வை ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை ‘புலிகள், பயங்கரவாதிகள் என கூச்சலிட்டு குழப்பம் விளைவித்தமைக்கு, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“துறைசார் மேற்பார்வை குழுவில் சிறிதரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் எமது தரப்பு பிரச்சினைகளை கூறுகையில் அதற்கு இடம் வழங்காது ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் அவர்களை பார்த்து விடுதலைப் புலிகள், பயங்கரவாதி, என்ற வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர்.
இது மிகவும் மோசமான சம்பவமாகும். இவ்வாறான மோசமான நிலையொன்று இடம்பெற்ற போதும், ஆளுந்தரப்பு உறுப்பினர் சந்திம வீரக்கொடி மட்டுமே அவர்களுக்கு எதிராக பேசி அவ்வாறு கூற வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
எனினும் எமது உறுப்பினர்கள் குழுவில் கலந்து கொள்ளாது வெளியேறியுள்ளனர். இதனை சபை முதல்வர் கருத்தில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
அதேவேளை, எதிர்க்கட்சி உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன சபையில் இது குறித்து பேசிய போது,“ சிறிதரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் குழுவை விட்டு வெளியேறியுள்ளனர்,
மக்களின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை இவ்வாறு விமர்சிப்பது மிகவும் மோசமானது, அதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.