யாழ். காரைநகர் கடற்பரப்பில் கடந்த 18ஆம் திகதி உயிரிழந்த தமிழக மீனவர் ராஜ்கீரனின் சடலம் இன்று சர்வதேசக் கடலில் வைத்து இந்திய கடலோரக் காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
காரைநகர் கோவளம் பகுதிக்குள் கடந்த 18 ஆம் திகதி ஊடுருவிய தமிழக மீனவரின் படகு இலங்கை கடற்படையினரின் படகுடன் மோதி கடலில் மூழ்கியது.
இதன்போது இரு இந்திய மீனவர்கள் மீட்கப்பட்டபோதும் ஒருவர் காணாமல்போயிருந்தார். இவ்வாறு காணாமல்போன இந்திய மீனவரான ராஜ்கீரன் கடந்த 20 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த மீனவரின் சடலம், இன்று அதிகாலை 5 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்திசாலையில் இருந்து யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தால் பொறுப்பெடுத்து கொண்டு செல்லப்பட்டது.
அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட சடலம் காலை 7 மணியளவில் இலங்கை கடற்படையினரின் கப்பலில் ஏற்றப்பட்டு 7.30 மணியளவில் இலங்கை கடற்படையின் கப்பல் சர்வதேச எல்லையை நோக்கிப் புறப்பட்டது.