24 வருடங்களுக்கு முன் ஸ்தாபிக்கப்பட்டது முதல், சகல நிலைகளையும் சேர்ந்த மக்களுக்கு தமது சொந்த முயற்சியில் உயர்வடைவதற்கு உதவும் தனது பிரதான கொள்கைகளுக்கமைய செயலாற்றும் வங்கியாக SDB வங்கி திகழ்கின்றது.
வங்கி அண்மையில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் உங்களை மதிக்கும் எனும் தொனிப்பொருளில் அமைந்த பிரச்சாரத் திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது. சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மைகள் மற்றும் சமூகத்துக்கு உதவும் தனது அர்ப்பணிப்புக்கமைய இந்தப் பிரச்சாரத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுவதுடன், நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 53 சதவீத பங்களிப்பை வழங்கும் சிறு மற்றும் நடுத்தரளவு துறைக்கு ஆதரவளிப்பது SDB வங்கியின் பிரதான நோக்கமாக அமைந்திருப்பதுடன், பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு வலுவூட்டுவது மற்றும் இலங்கையில் டிஜிட்டல் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதில் பங்களிப்பு வழங்குவதும் இலக்காக அமைந்துள்ளது.
இந்த பொது இலக்கை பகிரும் வங்கியின் பாரியளவு முதலீட்டாளர்களினால் வங்கியின் இந்தச் செயற்பாடுகளுக்கு ஊக்கமளிக்கப்படுகின்றன. சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி ஹசித சமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “அண்மைக் காலமாக SDB வங்கி முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை கடந்திருந்தது. கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் முழுமையாக டிஜிட்டல் முறையில் உரிமை வழங்கல்களை வெளியிட்ட முதலாவது இலங்கையின் நிறுவனம் எனும் பெருமையைக் கொண்டுள்ளதுடன், அண்மையில் இரண்டாவது பொது பங்கு வழங்கலையும் (SPO) பூர்த்தி செய்திருந்தது.
இவை இரண்டும் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டிருந்ததுடன், மிகைக் கோரல்களையும் பதிவு செய்திருந்தன. இந்த சாதனைகளுடன் வங்கியின் செயற்பாடுகள், தொழில்நுட்பம் ஆகியவற்றின் மேம்படுத்தல் மற்றும் எமது நாடளாவிய வாடிக்கையாளர்களுக்கு நாம் எவ்வாறு சேவைகளை வழங்குகின்றோம் என்பதன் பிரகாரம், சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களை மேம்படுத்துவது, பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு வலுவூட்டுவது மற்றும் நாடளாவிய ரீதியிலான டிஜிட்டல் உள்ளடக்கத்தை செயற்படுத்துவது போன்றன SDB வங்கியின் பிரதான இலக்குகளாக அமைந்துள்ளன.” என்றார்.
பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவிகளை வழங்குவதனூடாக அடுத்தநிலைக்கு கொண்டு சென்று, அதனூடாக அவர்களையும் நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்கச் செய்வதில் SDB வங்கி தன்னை அர்ப்பணித்துள்ளது. விசேடத்துவம் வாய்ந்த நிதித் தீர்வுகளுக்கு மேலதிகமாக, பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கு வங்கியினால் ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சிகள், பயிற்சிப் பட்டறைகள் மற்றும் இதர செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
SDB வங்கிக்கு அண்மையில் ஐக்கிய அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்திடமிருந்து 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக வழங்கப்பட்டிருந்தது. இதில் 40 சதவீதமான தொகை பெண்களின் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும்.
இந்த அர்ப்பணிப்பு இலங்கையின் பொருளாதாரத்துக்கு அனுகூலம் அளிப்பதாக அமைந்திருக்கும். எதிர்காலத்துக்கு தயார்நிலையிலுள்ள வங்கியாக SDB வங்கி தன்னை நிலைநிறுத்தியுள்ளதுடன், பரிபூரண, சகல பிரிவுகளிலிருந்தும் ஆதரவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. சிறிய முதல் நடுத்தரளவு வங்கித் தீர்வுகளுக்கான வாடிக்கையாளர்களின் தேவைகளை இனங்காணல், புரிந்து கொள்ளல் மற்றும் அவற்றுக்கு ஏற்ற வகையில் செயலாற்றல் போன்றவற்றில் வங்கி பரிபூரண கட்டமைப்புகளை வழங்குவதுடன், இந்தத் தீர்வுகள் குறித்த வியாபார முயற்சிகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதாக அமைந்துள்ளன. அத்துடன் சந்தையில் போட்டிகரமான முறையில் இயங்குவதற்கும் தமது முழு ஆற்றலை வெளிப்படுத்தவும் உதவியாக அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளுக்கு சேவையாற்றுவதுடன், பல பெறுமதி சேர்க்கப்பட்ட உள்ளம்சங்களையும் வங்கி வழங்குகின்றது.
இதில், பெறுமதி சங்கிலி மேம்படுத்தல்கள் முதல் நிதி முகாமைத்துவம் வரையிலான வெவ்வேறு வியாபாரப் பிரிவுகளில் விழிப்புணர்வை கட்டியெழுப்பும் நிகழ்ச்சித்திட்டங்கள் அடங்கியுள்ளன. இந்த அறிவுப் பகிர்வு செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையில், ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதற்காக வங்கியானது CA ஸ்ரீ லங்கா போன்ற நிபுணத்துவ அமைப்புகளுடன் கைகோர்த்துள்ளது. சமூகத்தின் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான பயணத்தை முன்னெடுக்கும் முன்னணி அமைப்பாக SDB வங்கி திகழ்கின்றது.
இலங்கையில் டிஜிட்டல் முறை கொடுக்கல் வாங்கல்களை ஊக்குவிப்பதற்காக முன்னெடுக்கப்படும் பாதுகாப்பான கொடுப்பனவுத் தீர்வான LANKAQR ஐ முன்னெடுத்துச் செல்வதற்காக இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்து பணியாற்றுகின்றது. அத்துடன் தனது சொந்த பன்முக செயற்பாடுகளைக் கொண்ட Mobile Wallet ஆன UPay App இனூடாகவும் பல்வேறு டிஜிட்டல் தீர்வுகள் மற்றும் பெறுமதி சேர் சேவைகளை பொது மக்கள் மத்தியில் கொண்டு சென்று, SDB வங்கி வாடிக்கையாளர்களுக்கு வலுவூட்டியுள்ளது. SDB வங்கியைப் பொறுத்தமட்டில் நிலைபேறாண்மை (Sustainability) என்பது மற்றுமொரு பிரதான கரிசனைக்குரிய விடயமாகும்.
இலங்கையின் பொருளாதாரத்தை நிலைபேறானதாக திகழச் செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது. கிளைகளில் சக்திப்பாவனையை குறைப்பது போன்ற எளிமையான செயற்பாடுகள் முதல், வாடிக்கையாளர்களுக்கு சகல வங்கிச் சேவைகளையும் ஒன்லைன் மற்றும் டிஜிட்டல் நாளிகைகளினூடாக முன்னெடுப்பதனூடாக, கிளைக்கு விஜயம் செய்யும் பயணங்களை குறைப்பது வரையான நடவடிக்கைகளையும், மாற்று வலுத் திட்டங்களுக்கு விசேட நிதித் தீர்வுகளை வழங்குவது போன்ற நடவடிக்கைகள் மூலம், நிதி மற்றும் சூழலுக்கு நிலைபேறாண்மையுள்ள செயற்பாடுகளை முன்னெடுப்பதில் அடங்கியுள்ளன.
தனது பிரதான நோக்கம், செயற்பாட்டு சிறப்பு மற்றும் தொழில்நுட்பத்தை மையப்படுத்திய வளர்ச்சி வழிநடத்தல் போன்றவற்றினூடாக சந்தையில் SDB வங்கி தன்னை வேறுபடுத்தியுள்ளது. இலாபமீட்டுவது என்பதை கொள்கையளவில் ஊக்கமளிக்கும் விடயமாக கருதாத போதிலும், இலங்கையின் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கு ஆதரவளிப்பது, பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு வலுவூட்டுவது மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பொது மக்கள் மத்தியில் கொண்டு செல்வது போன்றவற்றினூடாக வங்கி வழிநடத்தப்படுகின்றது.
உங்களைமதிக்கும் என்பது SDB வங்கியை சிறந்த வகையில் வரைவிலக்கணப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு வாடிக்கையாளரும் அவர்களின் பெறுமதிக்கமைய அல்லாமல், அவர்களின் திறன்களுக்கமைய மதிப்பிடப்படுகின்றனர்.