காங்கேசன்துறையில், புதிய சீமெந்து தொழிற்சாலையைக் கட்டும் பணிகள், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என, இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் காமினி எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
“செயலிழந்துள்ள காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையின் 725 ஏக்கர் காணிகளை துப்புரவு செய்வதற்கும், அதன் வளாகத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள 185 ஏக்கர் நிலத்தை விடுவிக்க கோரும் வகையிலுமான அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி பெறப்பட்ட நிலையில், குறித்த நிலப்பகுதியில் அமைந்துள்ள 100இற்கும் அதிகமான கட்டடங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
எனினும், இலங்கை இராணுவத்தினர் வசமுள்ள காணிகளில் இருந்து அவர்களை வெளியேறுமாறு அதிகாரபூர்வமாக கோரப்படவில்லை. அடுத்த ஆண்டு கட்டுமானப்பணிகள் தொடங்கப்படும் போது அவர்கள் அங்கிருந்து வெளியேறுவார்கள்.
சீமெந்து கூட்டுத்தாபனம், லங்கா சீமெந்து நிறுவனம் ஆகியவற்றுக்கு சொந்தமான வளாகங்கள் இலங்கை இராணுவத்தின் உதவியுடன் அகற்றப்படுகின்றன. மிகவும் சேதமடைந்த கட்டிடங்களை அகற்றி, பயன்படுத்தக் கூடிய கட்டிடங்களை தனிமைப்படுத்துகிறோம்.
நல்ல இயந்திரங்களை வைத்துக் கொண்டு பயன்படுத்த முடியாதவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம். புதிய தொழிற்சாலையை ஆரம்பித்து செயற்படுத்த 200 மில்லியன் டொலர் வரை முதலீடு தேவைப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.