
சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைகளில் உள்ளோரின் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக செயற்பட்டு வந்த லொஹான் ரத்வத்தயுடன் சம்பந்தப்பட்ட, இரண்டு வௌ;வேறு சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் அண்மையில் ஊடகங்களில் வெளியாகின. ஒரு சம்பவத்தில் இராஜாங்க அமைச்சர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர்களை கீழ்த்தரமாக நடத்தியதாகவும் அவர்களை துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் நடந்த வேளை குறித்த விடயதானத்துக்கான இராஜாங்க அமைச்சராக செயற்பட்டிருந்த ரத்வத்த சிறைகளில் அடைக்கப்பட்டோரின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்புக்கு பொறுப்பு வாய்ந்தவராக காணப்பட்ட சமயத்தில், அவரால் பாதுகாக்கப்பட வேண்டிய நபர்களே அவரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். சம்பவம் நிகழ்ந்து மூன்று வாரங்களின் பின்னர், அவருக்கு வழங்கப்பட்டிருந்த மற்றைய அமைச்சுப் பதவியில் அவர் தொடர்ந்தும் செயற்படுகின்றார்.
பொறுப்புக் கூறல் ஏன் ஒவ்வொரு இலங்கை பிரஜைக்கும் முக்கியமானது?
இலங்கையைப் பொறுத்த வரை பொறுப்புக் கூறல் என்பது யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுடன் மாத்திரம் தொடர்புடைய விடயம் என்ற (தவறான) புரிதல் காணப்படுகின்றது. பொறுப்புக் கூறல் இன்மையினால் ஒட்டுமொத்த இலங்கையும் துயருறுகின்றது என்பதே இலங்கையின் சமகால யதார்த்தமாக அமைந்துள்ளது.
பொறுப்புக் கூறல் காணப்படாத நிலையில் யுத்தத்துடன் தொடர்புடைய மீறல்களை தண்டனை விலக்களிப்புக்களுடன் மேற்கொள்வதை இயலுமாக்கும் சூழலை அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் உருவாக்கின.
பொறுப்புக் கூறல் இன்மையே இராஜாங்க அமைச்சர் ரத்வத்தயின் இந்த அதிர்ச்சியளிக்கும் நடத்தைக்கு வழிவகுத்துள்ளது. மக்கள் தாம் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு பொறுப்புக் கூற வேண்டிய வழமை இங்கு காணப்படாமை காரணமாக ரத்வத்தயால் தொடர்ச்சியாக அமைச்சுப் பதவியொன்றை வகிக்க முடிகின்றது. எனவே, பொறுப்புக் கூறல் காணப்படாத நிலை ஒவ்வொரு இலங்கைப் பிரஜைக்கும் கரிசனைக்குரிய விடயமாக அமைந்துள்ளது.
சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதற்கான கோரல்கள் இராஜாங்க அமைச்சரில் மாத்திரம், அதாவது குறித்த தனிநபரில் மாத்திரம் கவனக் குவிவு கொண்டதாக அமைந்திருக்கின்றது. இங்கு நியமிக்கும் அதிகாரம் கொண்டவர், அதாவது ஜனாதிபதி கொண்டுள்ள பொறுப்பு தொடர்பில் எந்த வித கவனமும் செலுத்தப்படவில்லை.
இதற்கு மாறாக, வன்முறை மற்றும் மிரட்டல் போன்றவற்றில் நீண்டகாலம் ஈடுபட்ட நபர் ஒருவரை இராஜாங்க அமைச்சராக, குறிப்பாக சிறைச்சாலைகள் தொடர்புபட்ட அமைச்சுப் பதவிக்கு ஏன் ஜனாதிபதி நியமித்தார் என்ற கேள்வியை பிரஜைகள் கேட்க வேண்டும். ஜனாதிபதி ஏன் குறித்த நபரை ஏனைய அமைச்சுப் பதவிகளில் இருந்து அகற்றவில்லை என்ற கேள்வி மிகவும் முக்கியமாக கேட்கப்பட வேண்டும்.
ரத்வத்த இன்னொரு அமைச்சுப் பதவியை வகிக்க அனுமதிக்கப்படுவதன் மூலம், ஜனாதிபதி மக்களுக்கு அறிவிக்கும் விடயம் யாதெனில் ஒருவர் அரசாங்கத்தின் அங்கமாக இருக்கும் வேளை அவர் எத்தகைய மீறல்களை மேற்கொண்டாலும் அவற்றுக்கான பொறுப்புக்கூறலில் இருந்து பாதுகாக்கப்படுவார் என்பதேயாகும்.
அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்தை உதாசீனப்படுத்துவதாகவும் அவர்கள் அவற்றுக்கு பொறுப்புக்கூற வைக்கப்படாததாகவும் குறிப்பிடப்படும் அதிக எண்ணிக்கையான சம்பவங்கள் ஊடகங்களில் தொடர்ச்சியாக வெளிவருவது இந்நிலைக்கான சான்றாக அமைகின்றது. சட்டத்தை மீறுவதன் மூலமும் அவ்வாறு மீறுபவர்களை பாதுகாப்பதன் மூலமும் சட்டத்தின் ஆட்சிக்கு எதிராக நடந்து கொள்வதற்கு அரசாங்கமே தலைமைத்துவம் வழங்குவதை இந்நிலை எமக்கு எடுத்துக்காட்டுகின்றது. இதன் விளைவாக, ஒவ்வொரு பிரஜைக்கும் சட்டம் வழங்கும் பாதுகாப்புக்கு குந்தகம் விளைகின்றது.
பயங்கரவாத தடைச்சட்டத்தன் கீழ் தடுத்து
வைக்கப்பட்டவர்களின் பாதிப்புறும் ஏதுநிலைகள்
அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த சிறைக் கைதிகளில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 நபர்கள் மாத்திரமே இராஜாங்க அமைச்சரினால் அச்சுறுத்தல் மற்றும் இழிவாக நடத்தப்படல் என்பவற்றுக்கு உள்ளாக்கப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது சில கேள்விகளை எம்முள் எழுப்புகின்றது.
இராஜாங்க அமைச்சர் ஏன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்களை மாத்திரம் தேடினார்? பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குற்றத் தீர்ப்பு வழங்கப்படாமலேயே குற்றமிழைத்தவர்களாக அனுமானிக்கப்படல் உள்ளடங்கலாக எண்ணிலடங்காத மீறல்களுக்கு ஆளாக்கப்பட்டடு வருகின்றனர்.
வரலாற்று ரீதியாக, பயங்கரவாத தடைச்சட்டம் விகிதசமமற்ற அளவில் தமிழர்களுக்கு எதிராக பிரயோகிக்கப்பட்டுள்ளதுடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களின் பின்னர் முஸ்லிம்களுக்கும் எதிராக அதிகளவில் பிரயோகிக்கப்படும் சட்டமாக அமைந்துள்ளது. எனவே, இந்த சட்டம் அரசாங்கத்தை விமர்சிக்கும் நபர்களுக்கு எதிராக பிரயோகிக்க முடியுமானதாக அமைந்துள்ள நிலையிலும் இந்தச் சட்டத்தின் அமுல்படுத்தலில் இன-மத பரிமாணம் ஒன்றும் காணப்பட்டது.
குறித்த சம்பவத்துக்கு ‘அரசியல் அல்லது இன அல்லது இனத்துவ சாயம் ஒன்று பூசப்படக் கூடாது…. ஏனெனில் அது அவ்வாறனதல்ல’ என கடந்த செப்டம்பர் 22, 2021 அன்று நீதியமைச்சர் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும் இதன் யதார்த்தம் எங்களுக்கு வேறொரு கதையை சொல்கின்றது.
உதாரணமாக, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் அனைவரும் ‘தமிழீழ விடுதபை;புலிகள் இயக்கச் சிறைக் கைதிகள்’ எனவும் அவர்களின் விடுதிகள் ‘தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களின் விடுதிகள்’ எனவும் அழைக்கப்படுவதை எனது சிறைச்சாலை விஜயங்களின் பொழுது என்னால் அவதானிக்க முடிந்தது.
காலையில் திறந்து விடப்படும் சிறையில் உள்ளவர்களின் விபரங்கள் குறிப்பிடப்படும் தாளில் அவர்கள் அனைவரும் ‘ தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கச் சிறைக் கைதிகள்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். எனவே இச்சட்டத்தின் கீழ் எவராவது சிறையிலடைக்கப் பட்டிருந்தால், அவருக்கு குற்றத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயகத்தின் உறுப்பினர் என்றே முத்திரையிடப்படுகின்றார்.
அநுராதபுர சிறைச்சாலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் பற்றி கடந்த செப்டெம்பர் 22 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய நீதி அமைச்சர் அலி சப்ரி ‘தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கச் சிறைக் கைதிகள் மற்றும் தடுப்புக் காவலில் உள்ளோர்’ என்றே குறிப்பிடுகின்றார். அவரின் இவ்வுரை பாரபட்ச நிலை கட்டமைப்பில் ஆழமாக வேரூன்றியுள்ளதையே எமக்கு எடுத்துக் காட்டுகின்றது.
அவ்வாறான முத்திரையிடல், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுபவர்களுக்கு ‘குற்றம் நிரூபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகளே’ என்ற உரிமையை மறுப்பதாக அமையும் அதேவேளை குறித்த உரிமையை தனது உரையின் போது நீதியமைச்சர் இராஜாங்க அமைச்சர் ரத்வத்தவுக்கு வழங்குமாறு கோரியிருந்தார்.
அநுராதபுர சிறைச்சாலையில் நடந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் வழங்கியுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பட்டியலிட்ட அமைச்சரின் உரையில் ஒரு விடயம் குறிப்பிடப்படவில்லை – சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஏற்பட்ட உளவியல் தாக்கங்களே அவ்விடயமாகும். இராஜாங்க அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்டன என அறிக்கையிடப்பட்ட செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.
\பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்கள் அனுபவித்திருக்கக் கூடிய மீறல்களை கருத்திற் கொள்ளும் போது குறித்த சம்பவம் ஏற்படுத்திய தாக்கம் அதிகமானதாக இருக்கலாம். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்த வைக்கப்பட்டுள்ள நபர்களில் பெரும்பான்மையானோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடத்திய தேசிய ஆய்வு ஒன்றுக்காக நேர்காணல்களுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதன்பொழுது தாம் பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட போது தமக்கு மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள், தமது வழக்குகளில் இடம் பெறும் நியாயப்படுத்த முடியாத நீண்ட தாமதம், தமது நேரத்தை சிறைகளில் கழிக்கும் வேளை அதனை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்துவதற்கான செயற்பாடுகள் இன்மை, குடும்பத்துடனான தொடர்புகள் இன்மை மற்றும் தமது குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் காரணமாக தாம் மனச் சோர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர்.
குறித்த தேசிய ஆய்வில், உதாரணமாக, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள ஆண்களில் 80சதவீதமானோர் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆண்களில் 76சதவீதமானோர் தமது நாளாந்த செயற்பாடுகளை பாதிக்கும் அளவுக்கு மனவழுத்தம், பதட்டம் மற்றும் துக்கம் என்பவற்றால் அவதியுறுகின்றனர்.
மேலும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள ஆண்களில் 21சதவீதமானோர் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆண்களில் 19சதவீதமானோர் தமக்கு சுய தீங்கு செய்து கொள்ள முற்பட்டதாக தெரிவித்த அதேவேளை குற்றத் தீர்ப்பு வழங்கப்பட்டோரில் 21சதவீதமானேர் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 10சதவீதமானேர் சிறைகளில் உள்ள நிலையில் தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிவித்தனர்.
மனவழுத்த நிலையை அனுபவித்தல் மற்றும் சுய தீங்கினை மேற்கொள்ளல் போன்ற உணர்வுகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றத் தீர்ப்பு வழங்கப்பட்டோரின் இடையே அச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்களை விட அதிக எண்ணிக்கையானவர்கள் மத்தியில் காணப்படுகின்றது. பயங்கரவாத தடைச சட்டத்தின் கீழ் குற்றத் தீர்ப்பு வழங்கப்படும் நபர்கள் அச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்களை விட சராசரியாக அதிக காலத்தை சிறையில் கழிப்பது இந்நிலையினை விளக்குவதற்குரிய விடயமாகக் கொள்ளப்படலாம்.
பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அதியுயர் பாதுகாப்பு வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை தான் மேற்கொண்டதாக நீதியமைச்சர் தனது பாராளுமன்ற உரையின் போது தெரிவித்தார், அது வரவேற்கத்தக்கது. அவ்வாறான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் போது, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட நபர்களின் பாதுகாப்பு அவ்வாறான நபர்கள் அனுபவித்துள்ள மீறல்களின் பின்னணியில் நோக்கப்பட வேண்டும்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து எழுந்த பொதுமக்கள் கொந்தளிப்பு காரணமாக சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறையில் உள்ள சக நபர்கள் குறித்த சம்பவம் இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது எனக் கருதி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் சாத்தியத்தையும் எம்மால் மறுக்க முடியாது.
வரலாற்று ரீதியாக, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படும் நபர் ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறையிலடைக்கப்பட்டுள்ள ஏனைய நபர்களாலும் பாகுபாட்டுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். ஒரு நபர் இந்நிலையினை பின்வருமாறு விபரிக்கின்றார்: ‘நான் சிறையிலடைக்கப்பட்ட அதே நாளின் இரவில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோர் அடைக்கப்படும் விடுதிக்கு மாற்றப்பட்டேன் (அதியுயர் பாதுகாப்பு மிக்க இந்த விடுதி ஏனைய சிறைச்சாலை சனத்தொகையில் இருந்து சுவர் ஒன்றினால் பௌதீக ரீதியில் வேறுபடுத்தப்பட்டுள்ளது).
சிறையிலுள்ள ஏனையோர் இதனை அவதானித்தனர் (அத்துடன் நாம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர்), அதன் பின்னர் அவர்களின் எமது விடுதியின் கதவுக்கு வெளியே நின்று கொண்டு ‘என்ன நடந்தது என்பது எமக்குத் தெரியும், நீங்கள் எப்போதாவது இந்த விடுதிக்கு வெளியே வந்தால், நாம் உங்களைக் கொன்று விடுவோம்’ எனக் கூறினர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்ககப்பட்டுள்ள நபர்கள் அனுபவிக்கும் பாகுபாடு மற்றும் வன்முறையின் அளவு குறித்த காலப்பகுதியில் உள்ள அரசாங்கங்களின் செயற்பாடுகளில் தங்கியிருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. உதாரணமாக, பதவியில் உள்ள அரசாங்கம் இனவாத அரசாங்கமாக இருந்தால் அல்லது தமிழர்களுக்கு எதிரான கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதாக இருந்தால்;, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்கள்; அதிகளவான தாக்குதல்கள் மற்றும் பாரபட்பட்சம் என்பவற்றை சிறைச்சாலைகளினுள் அனுபவித்தனர்.
இது சில வேளைகளில் வன்முறையாகவும் மாற்றமடைகின்றது, இது பின்வரும் சம்பவங்களின் விபரிப்பு மூலம் எமக்குத் தெளிவாகின்றது: ‘1997 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தின் போது, அவர்கள் எம்மை முழந்தாளிட வைத்தனர். நீங்கள் (வலைக்) கதவினால் உள்நுழைந்ததன் பின்னர் இந்த இடத்தைக் கண்டிருப்பீர்கள். அதன் பின்னர், அவர்கள் எமக்கு அடிக்க ஆரம்பித்தனர். அச்சமயத்தில் ‘ஒ’ என்ற நபர் பிரதான சிறைக்காவலரின் அறையில் கால் மேல் கால் போட்டவாறு அதனை பாரத்து இரசித்துக் கொண்டிருந்தார்.’
‘நவம்பர் 13, 2009 இல் சிறையில் ஒரு கலவரம் ஏற்பட்டது. அப்போது து விடுதியில் எம்மவர்கள் கிட்டத்தட்ட 100 பேரும் அவர்கள் 500 பேரும் இருந்தனர். 1983 ஆம் ஆண்டு நிகழந்ததைப் போன்று நாம் உங்களைக் கொல்லப் போகின்றோம் என அவர்கள் (சிறையில் உள்ள சிங்கள நபர்கள்) எம்மிடம் கூறினர். கிட்டத்தட்ட எம்மில் 15 பேர் மோசமான தாக்குதலுக்கு இலக்காகினர், நான் கல்லெறிகளை வாங்கி தப்பித்துக்கொண்டேன்.’ இந்த சூழமைவில், குறித்த நபர்களை வேறு சிறைகளுக்கு மாற்றுதல் உள்ளடங்கலாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின்; பாதுகாப்பு மற்றும் முன்பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.
நிறைவுறாத விசாரணைகளின்
ஊடாக நீதியை தாமதப்படுத்தல்
இந்த சம்பவம் தொடர்பில் நான்கு விசாரணைகள் தற்பொழுது இடம்பெறுகின்றன: அவற்றில் ஒன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படுகின்றது. சிறைச்சாலை அதிகாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வழங்கிய வாக்குமூலங்களின் உள்ளடக்கங்களை ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான கலாநிதி நிமால் கருணசிறி, த நேசன் பத்திரிகைக்கு கடந்த செப்டம்பர் 16 அன்று வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
அவரின் கூற்றுக்களுக்கு ஏற்ப, குறிப்பிடப்பட்ட எந்த விடயங்களையும் தாங்கள் காணவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இராஜாங்க அமைச்சர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட நபர்களுடன் இருந்த வேளை அமைச்சரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தேவை இருந்தமையினால் அங்கு தம்மால் இருக்க முடியவில்லை என்ற காரணத்தையும் சிறைச்சாலை அதிகாரிகள் முன்வைத்திருந்தனர். நான் பல சிறைச்சாலைகளுக்கு மேற்கொண்ட பல விஜயங்களின் அடிப்படையில், சிறைச்சாலை விஜயங்களை மேற்கொள்ளும் நபருடன் எப்போதும் பாதுகாப்பு அதிகாரிகள் இருப்பதே மிகவும் முக்கியமான பாதுகாப்பு நெறிமுறையாக அமைகின்றது.
இது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர்கள் காவலில் வைக்கப்படும் இடங்கள் போன்ற உயர் பாதுகாப்பு இடங்களில் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படும் நெறிமுறையாகும். எனவே, இராஜாங்க அமைச்சரை தனியாக விட்டு சிரேஷ;ட சிறைச்சாலை அதிகாரிகள் சென்றுள்ளனர் என்பது கற்பனை கூட செய்து பார்க்க முடியாத விடயமாகும்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் காவலில் வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட நபர்களைக் கருத்திற் கொள்ளும் வேளை இவ்விடயம் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டையிடும் விடயமாக அமைகின்றது, ஏனெனில் குற்றச் சாட்டுகளை வாபஸ் வாங்குமாறு அல்லது அவர்களின் வாக்குமூலங்களில் மாற்றங்களை ஏற்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளால் இந்நபர்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படலாம்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள், குறித்த இராஜாங்க அமைச்சர் துப்பாக்கி ஒன்றுடன் சிறைச்சாலைக்குள் நுழைந்தமையை முன்தடுக்க தவறியுள்ளதுடன் அங்குள்ள நபர்கள் இழிவாக நடத்தப்பட்டமையைத் தடுப்பதற்கும் எந்த வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. அதிகாரிகள் குறித்த சம்பவத்தை சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அறிவித்தனரா என்பதும் எமக்குத் தெரியாது. அவ்வாறு அறிவிக்கப்ட்டிருந்தால் சிறைச்சாலை ஆணையாளர் ஏதும் நடவடிக்கைகளை மேறகொண்டாரா என்பதும் தெரியவில்லை. உதாரணமாக, அவர் நீதியமைச்சருக்கு அறிவித்தாரா? அவர் பொலிசாரின் கவனத்துக்கு இதனைக் கொண்டு வந்தாரா? இவை பற்றிய தெளிவுகள் இல்லை.
அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அநுராதபுர சிறைச்சாலைக்கு விஜயம் செய்தமை தொடர்பான அறிக்கைகளும் பல காரணங்களால் கரிசனை மிக்கனவாக அமைகின்றன. முதலாவதாக, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ள அதிகாரமற்ற அமைச்சர் ஒருவர் முதலாவது நபராக குறித்த சிறைச்சாலைக்கு விஜயம் செய்து தன்னால் செய்து முடிப்பதற்கு அதிகாரமற்ற விடயங்களை நிறைவேற்றுவதாக அந்நபர்களுக்கு ஏன் வாக்குறுதியளிக்க வேண்டும் என்பது இங்கு தெளிவற்ற விடயமாக அமைந்துள்ளது.
நாமல் ராஜபக்ஷ ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற அரசியல் தரப்புக்கள் உங்களைதவறாக வழிநடத்துவதற்கு’ இடமளிக்க வேண்டாம் என அங்குள்ளவர்களிடம் தெரிவித்திருந்தமை தற்போதைய அரசாங்கம் தமிழ் சமூகத்தைக் கையாள்வதற்கு என்ன வகையான மூலோபாயத்தைக் கையாள்கின்றது என்பதை விளக்குகின்றது.
தமிழ் அரசியல் கட்சிகள் கொண்டுள்ள பல குறைபாடுகளை நாம் எடுத்துக் கூறும் அதே வேளை, தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் எந்த வித கரிசனையும் அற்ற அரசாங்கத்தின் அதிகாரம் மிக்க உறுப்பினர் ஒருவர் தமிழ் மக்களுக்கு தமிழ் அரசியல் கட்சிகள் பற்றி எச்சரிப்பது பிரச்சினைக்குரிய விடயமொன்றாகும்.
இக்காலகட்டத்தில், தமிழ் அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக இச்சம்பவத்தை சுட்டிக்காட்டி பொறுப்புக் கூறலை கோரிய நிலையில், இது தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர்களை எந்தப் பிரச்சினையையும் எழுப்பாமல் இருக்க வைக்கும் நோக்கில் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகின்றது. விடுதலையின் பின்னர் தாம் விரும்பும் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணைந்து கொள்ளலாம் எனவும் ‘எனினும் அவர்கள் எந்தவொரு அரசியல் கட்சியாலும் பயன்படுத்தப்படாமல் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’ எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அந்நபர்களிடம் கூறியிருந்தார். இந்த ஆணவம் மிக்க கூற்று அரசாங்கம் சிறுபான்மையினரின் உரிமைகளை கருணையுடன் வழங்க வேண்டியதில்லை என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் உள்ளதை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. இந்த உரிமைகள் ஏற்கனவே சிறுபான்மையினருக்கு உள்ள உரிமைகளாகும்.
இச்சம்பவங்கள் எமது பொது நிறுவனங்களின் செயலிழப்பை எமக்கு கோடிட்டுக் காட்டுவது மட்டுமன்றி எமது பொது மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின் ஆட்சி என்ற வரையறைக்குள் நின்று செயற்படும் இயலுமை அற்றவர்களாக உள்ளனர் என்பதையும் எமக்கு தெளிவாகக் காண்பிக்கின்றது. இவை அரசாங்கம் சட்டத்தின் ஆட்சியைக் கருத்திற்கொள்வதில்லை என்பதற்கும் இலங்கைக் குடிமக்களை ஏளனமாகவே நோக்குகின்றது என்பதற்குமான உதாரணங்களாக அமைகின்றன.
அரசாங்கம் செய்யும் அனைத்து சட்டத்தை மீறும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் பொறுப்புக் கூறாது இருப்பதை மக்கள் சகித்துக்கொள்வார்கள் என்ற நிலைப்பாட்டில் அரசு காணப்படுகின்றது. இந்நிலை, ஏற்கனவே சேதமடைந்து காணப்படும் அரசு மற்றும் குடிமக்கள் உறவினை, விசேடமாக சிறுபான்மை மற்றும் ஓரங்கட்டப்பட்ட சமூகங்கள் அரசுடன் கொண்டுள்ள உறவினை இன்னும் மோசமாக்கும். அதே வேளை, அரசாங்கம் உடைந்து போன இந்த உறவினை மீளக் கட்டியெழுப்புவதில் எந்த வித அக்கறையையும் காண்பிக்காது நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை வழங்குவதில் மாத்திரமே கவனம் செலுத்தி வருவது கவலைக்குரியதாகும்.