இலங்கையைச் சேர்ந்த 59 தமிழர்களை கனடாவுக்கு ஏற்றிக் கொண்டு புறப்பட்ட படகு ஒன்றை அமெரிக்க கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியப் பெருங்கடலில், மாலைதீவுக்கும் மொறிசியசுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில், இந்த மீன்பிடிப் படகை அமெரிக்க கடற்படையினர் இடைமறித்து கைப்பற்றியுள்ளனர்.
இந்தப் படகு இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள, கொல்லத்தைச் சேர்ந்த, ஈஸ்வரி என்ற பெண்ணுக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட படகில் இருந்த 59 பேரும் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் என்றும், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் உள்ள அகதி முகாம்களில் தங்கியிருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தின் குழச்சல் துறைமுகத்தில் இருந்து கடந்த செப்ரெம்பர் மாதம், 22 ஆம் நாள் மீன்பிடிக்கச் சென்ற படகு ஒன்று காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர், அந்தப் படகு இந்தியப் பெருங்கடலில், டியாகோகார்சியா தீவுக்கு அருகே, அமெரிக்க கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அந்தப் படகு சட்டவிரோதமாக கனடாவுக்கு அகதிகளை ஏற்றிச் சென்றதாகவும், படகு மற்றும், அதிலிருந்தவர்கள் மாலைதீவு கடற்படையிடம் அமெரிக்க கடற்படையினரால், ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது இதுதொடர்பாக மாலைதீவு அரசாங்கம், இந்திய அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது.