யாழ்ப்பாணம்- அராலி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மகிழுந்து ஒன்றில் சுற்றிய இரண்டு இலங்கை இராணுவத்தினரை, பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம்ஒப்படைத்துள்ளனர்.
அராலி தெற்கு பகுதியில் நேற்று மகிழுந்து ஒன்றில் இருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றி திரிந்த போது, அவர்களை வழிமறித்த அப்பகுதி மக்கள், விசாரணைகளை மேற்கொண்ட போது, தாம் இராணுவத்தை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளனர்.
இயக்கச்சி இராணுவ முகாமில் பணியாற்றுவதாகவும், விடுமுறையில் அப்பகுதிக்கு வந்துள்ளதாகவும் அவர்கள் கூறியதை அடுத்து சந்தேகம் அடைந்த பொதுமக்கள், வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் வழங்கி இருவரையும் அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
இருவரும் இலங்கை இராணுவத்தில் கடமையாற்றுபவர்கள் என்பதனை உறுதிப்படுத்திக் கொண்ட பொலிஸார், அவர்களை பிணையில் விடுவித்துள்ளனர்.
விடுமுறையில் சென்றவர்கள் எதற்காக அராலி பகுதிக்கு சென்றனர் என்பது தொடர்பாக இராணுவத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.