நட்டத்தில் இயங்கும் எயர் இந்தியாவை டாடா நிறுவனம் ஏலத்தில் வாங்கியுள்ளதாக இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மத்திய அரசு நிறுவனமான எயர் இந்தியா தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வந்ததால், அதனை ஏலத்தில் விற்க முடிவு செய்யப்பட்டது.
இந்த ஏலத்தில் டாடா நிறுவனம் வெற்றி பெற்றுள்ளதாகவும், அந்த நிறுவனம் தாக்கல் செய்த ஏல விவரத்தை அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், ஜோதிராதித்யா சிந்தியா தலைமையிலான அமைச்சரவை குழு ஏற்று கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எயர் இந்தியாவை 18 ஆயிரம் கோடி ரூபாவுக்கு டாடா நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளதாகவும், வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் விற்பனை தொடர்பான அனைத்து நடைமுறைகளும் நிறைவடையும் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.
1932ஆம் ஆண்டு டாடா எயர்லைன்ஸ் என்று ஆரம்பிக்கப்பட்ட விமான சேவையே பின்னர் எயர் இந்தியா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 68 ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் எயர் இந்தியா, டாடா நிறுவனத்திடம் செல்லவுள்ளது.