திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பான இலங்கை – இந்திய உடன்படிக்கையை புதுப்பிப்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக, எண்ணெய் குதங்கள் தொடர்பில் முதற்தடவையாக இந்தியாவுடன் சட்டப்பிணைப்பு ஏற்படுத்தப்பட்டது.
இந்த உடன்படிக்கையின் கால எல்லை 2024 ஆம் ஆண்டுடன் நிறைவடைகின்றது. இந்நிலையில் மேற்படி உடன்படிக்கையை புதுப்பித்துக்கொள்ளும் நோக்கிலேயே இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இலங்கை வந்துள்ளார் என சுட்டிக்காட்டும் துறைசார் தொழிற்சங்கங்கள், உடன்படிக்கை புதுப்பிக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இது தொடர்பில் இன்றும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்ற தகவலை அநுராதபுரத்தில் வைத்து நேற்று வெளியிட்டார் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்.
மேற்படி வேலைத்திட்டத்தை எதிர்காலத்தில் எந்த அடிப்படையில் முன்னெடுப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன. பரந்தபட்ட கலந்துரையாடல்களின் பின்னரே தீர்மானம் எட்டப்படும். இது விடயம் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.” -என்றும் பீரிஸ் குறிப்பிட்டார்.