இலங்கைக்கான நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் (29/09) வெளிநாட்டு அமைச்சில் வைத்து வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை சந்தித்தார்.
பேராசிரியர் பீரிஸ் வெளிநாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்காக உயர்ஸ்தானிகர் அப்பிள்டன் வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்கிடையேயான கூட்டுறவை மேலும் உயர்த்துவதற்காக எதிர்காலத்தில் அவருடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றுவதற்கு உறுதிபூண்டுள்ளார்.
நியூசிலாந்து பல துறைகளில், குறிப்பாக பால் மற்றும் விவசாயத் துறைகளில் இலங்கையுடன் கூட்டுச் சேர்ந்துள்ளதுடன், இரு நாடுகளும் நட்புறவு ரீதியில் ஒத்துழைப்பின் புதிய பகுதிகளை அடையாளம் காண வேண்டிய நேரம் வந்துவிட்டது என அவர் குறிப்பிட்டார்.
இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான பரஸ்பரம் நன்மை பயக்கும் கூட்டணியை நினைவுகூர்ந்த பேராசிரியர் பீரிஸ், கொழும்பில் நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம் திறக்கப்படுவதானது, இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் முன்னேற்றுவதற்கு பெரும் பங்களிப்பை அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
உலகளாவிய வயதுவந்தோர் வாக்குரிமையை அனுபவிக்கும் மிகப் பழைமையான நாடுகளில் ஒன்றாக இலங்கையைக் குறிப்பிட்டு, நாடாளுமன்றத்தில் மற்றும் ஏனைய சட்டமன்றக் குழுக்களில் ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தில் இலங்கையில் இடம்பெற்று வரும் தேர்தல் சீர்திருத்த செயன்முறையை பேராசிரியர் பீரிஸ் விளக்கினார்.
நியூசிலாந்தில் தற்போதைய தேர்தல் முறைமையின் நேர்மறையான தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டிய அமைச்சர், நியூசிலாந்தில் உள்ள தேர்தல் முறைமையிலிருந்து கற்றுக்கொள்ள விரும்புவதாகவும், உள்நாட்டு முறைக்கு ஏற்ப மாற்றியமைக்கும் திறன்களை அமுல்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இரு நாடுகளும் குடியுரிமைத் தூதரகங்களை நிறுவுவதற்குத் தீர்மானித்த பரஸ்பர உடன்பாட்டைத் தொடர்ந்து, நியூசிலாந்து தனது வதிவிடத் தூதரகத்தை 2021 ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் நிறுவியதுடன், மைக்கேல் அப்பிள்டன் இலங்கைக்கான நியூசிலாந்தின் முதலாவது வதிவிட உயர்ஸ்தானிகராக செயற்படுகின்றார்.