எம்பிலிப்பிட்டிய, புதுநகரில் தனது இளம் மனைவியை கணவனே சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் இரண்டு குழந்தைகளின் தாயான இந்திரா மல்காந்தி (35) என்பவரே உயிரிழந்துள்ளார். கொலையாளி கணவர் தம்மிக குமார என்ற அனுர (47). அவர் உடவலவையில் மலர்ச்சாலை நடத்திவரும் கோடீஸ்வர தொழிலதிபராவார்.
கடந்த 26 ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. தம்பதியர்களுக்கு திருமணமாகி சுமார் 5 வருடங்கள் ஆகிறது. இது இருவருக்கும் இரண்டாவது திருமணம் என்று கூறப்படுகிறது. நீண்டநாட்களாக தம்பதியர்களிற்குள் தகராறுகள் நடந்துள்ளது. தொழிலதிபருக்கு முந்தைய திருமணத்தில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களின் பராமரிப்பை செலுத்தி வருகிறார். கொல்லப்பட்ட பெண்ணுக்கு முந்தைய திருமணத்தில் குழந்தைகள் இல்லை.
இறந்த பெண்ணின் இளைய சகோதரர் சந்தேக நபரின் பூக்கடையில் ஊழியராக பணியாற்றினார். இதனாலேயே தொழிலதிபருக்கும் அந்த பெண்ணிற்கும் அறிமுகம் ஏற்பட்டது. அவர்களின் திருமணம் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
திருமணத்திற்கு பிறகு இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மோதல் முற்றினால், மனைவி வீட்டை விட்டு வெளியேறி தனது தாயிடம் சென்று விடுவார். 26 ஆம் திகதி காலையிலும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, தனது குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி, எம்பிலிப்பிட்டிய தர்ஷனகம பகுதியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார்.
கணவனுடன் இனி வாழ முடியாதென்பதால் விவாகரத்துக்குத் தயாராகி வருவதாகவும், அதற்கான ஆவணங்களை தயார் செய்துள்ளதாகவும் வீட்டில் தெரிவித்துள்ளார். கணவன் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடனடியாக வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். “உடனடியாக வரவில்லை என்றால், நான் உன்னைக் கொன்றுவிடுவேன்” என்று தொலைபேசியில் மிரட்டினார்.
கணவனின் மிரட்டலால் அவர் அச்சமடைந்தார். அன்று இரவு ஏழு மணியளவில் குழந்தைகள், தம்பி மற்றும் தம்பியின் மனைவியுடன் வீடு திரும்பினர். வீட்டில் கணவன்- மனைவி தகராறு ஏற்பட்டது. மனைவியை கடுமையான குற்றம்சாட்டிய கணவன், அவரை வீட்டிலேயே இருக்கும்படி கூறியுள்ளார்.
ஆனால் மனைவி மறுத்து விட்டார். சகோதரனுடன் வீட்டிலிருந்து வெளியேற முயன்றார்.
இருப்பினும், மனைவியின் இளைய சகோதரனை மிரட்டி வீட்டை விட்டு வெளியேற்றி விட்டு, மனைவியை வீட்டில் தங்க வைக்க முயன்றார். தனது சகோதரனை வீட்டை விட்டு வெளியேற வேண்டாமென மனைவி கேட்டுக் கொண்டுள்ளார்.
“தம்பி, நீ விட்டுவிட்டு போனால் அவர் என்னைக் கொன்று விடுவார். என்னால் அவருடன் வாழ முடியாது” என கூறியுள்ளார். இருப்பினும், தொழிலதிபர் மனைவியின் சகோதரனை வீட்டுக்கு வெளியே அனுப்பினார்.
சகோதரன் சென்றதும், அவரின் பின்னாலேயே தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேற முயன்றார். வீட்டின் முன் வாயிலிருந்து வீதியில் சுமார் 10 மீற்றர் தூரம் நடந்து சென்ற மனைவியை, பின்னால் வந்து கணவர் பிடித்துக் கொண்டுள்ளார்.
பிளின்ட்லொக் கைத்துப்பாக்கியுடன் வந்தவர், மனைவியை பிடித்து, முகத்தைத் திருப்பி நெற்றியில் சுட்டுள்ளார். அவர் வைத்திருந்த குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அந்த பெண் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்தார்.
இந்த கொடூரமான சம்பவத்தின் போது உயிரிழந்த பெண்ணின் சகோதரர் அருகில் நின்று கொண்டிருந்த போதும், அவரால் அதை தடுக்க முடியவில்லை. இரத்த வெள்ளத்தில் வீழ்ந்த பெண்ணை எம்பிலிப்பிட்டிய பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும் அவர் உயிரிழந்தார்.
பொலிஸார் வந்தபோது சந்தேக நபர் தப்பி ஓடவில்லை. குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார்.
குற்றத்தின் போது சந்தேகநபர் அணிந்திருந்த இரத்தக் கறை படிந்த சட்டை மற்றும் குற்றத்திற்காக பயன்படுத்தப்பட்ட பின் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைதுப்பாக்கியையும் பொலிஸார் மீட்டனர்.
வீட்டில் சிசிடிவி. கமரா அமைப்பு மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் உடைந்து காணப்பட்டன.
சந்தேக நபர் எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.