இந்தோனேசிய வெளிநாட்டு அமைச்சர் ரெட்னோ லெஸ்டாரி பிரியன்சரி மர்சுடி நியூயோர்க்கில் உள்ள இந்தோனேசியத் தூதரகத்திற்கு இலங்கை வெளிநாட்டு அமைச்சரை வரவேற்றார். இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு பிரச்சினைகள் இல்லை ஆதலால், பொருளாதார ஒத்துழைப்பில் விஷேட கவனம் செலுத்தி இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதே முன்னுரிமையான விடயமாகும் என இந்தோனேசிய வெளிநாட்டு அமைச்சர் வலியுறுத்தினார். இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக, வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படல் வேண்டும்.
அணிசேரா இயக்கத்தின் உறுப்பினர்களாக இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மிக முக்கியமானவை என அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் குறிப்பிட்டார். அணிசேரா இயக்கத்தின் தத்துவம் ஒவ்வொரு பிரச்சினையிலும் சீரமைப்பது அல்ல, மாறாக ஒவ்வொரு பிரச்சினையையும் அதன் சொந்த அடிப்படையில் தீர்ப்பதாகும் ஆதலால் அணிசேரா இயக்கம் இன்றும் பொருத்தமானதாக உள்ளது.
எனவே இந்த இயக்கத்திற்கு நாம் அதிகமான ஆற்றலை செலுத்துதல் வேண்டும். இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பில் இந்தோனேசியாவும் இலங்கையும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டார். எனவே இந்து சமுத்திர விளிம்பு சங்கம் மற்றும் ஆசியான் பிராந்திய மன்றத்தை மேலும் வலுவூட்டுவது அவசியமானதாகும். பயங்கரவாதம் மற்றும் கடல்சார் குற்றங்களை எதிர்கொள்வது தொடர்பாக பாதுகாப்பு, உளவுத்துறைப் பகிர்வு மற்றும் ஊழியர் மட்ட ஆலோசனைகளிலான ஒத்துழைப்பை அமைச்சர் பீரிஸ் மேலும் பாராட்டினார்.
கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடிய குறிப்பிடத்தக்க வெற்றிக்காக இந்தோனேஷிய அரசாங்கத்திற்கு அமைச்சர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்தத் தொற்றுநோய் மனிதகுலத்தின் சக்திகளை ஒன்றிணைத்து, ஒற்றுமையுடன் ஒன்றிணைய அனுமதிக்கின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான சாத்தியங்களையும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அணிசேரா இயக்கம் மற்றும் இந்து சமுத்திர விளிம்பு சங்கம் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்குத் தேவை இருப்பதை இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர். வசதியான நேரங்களில் இரு அமைச்சர்களும் இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் விஜயங்களை மேற்கொள்ள வெளிநாட்டு அமைச்சர்கள் இருவரும் ஒப்புக்கொண்டனர்.