முன்னாள் சபாநாயகரும் அமைச்சருமான ஜோசப் மைக்கல் பெரேராவின் வீட்டு கதவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போய் தட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் ஜா-எல தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேராவின் வீட்டிற்கு சென்றிருந்தார். அவா் அங்கு சென்ற போது வீட்டின் கதவு மூடப்பட்டிருந்தது. கேட்டை திறக்க பல தடவை வாகனத்தின் ஹோா்ன் அடித்தாலும் யாரும் திறக்க வரவில்லை.
அப்போது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் ஜோசப் மைக்கல் பெரேராவின் வீட்டு தொலைபேசியில் அழைப்பு விடுத்து ஜனாதிபதி வருகை தந்துள்ளதாக தெரிவித்ததையடுத்து, வீட்டில் இருந்த ஒருவர் வந்து கேட்டை திறந்துள்ளார். ஜனாதிபதியின் வாகனம் வீட்டின் அருகில் நிறுத்தப்பட்டு வாகனத்தில் இருந்து இறங்கிய ஜனாதிபதியை வரவேற்று அமர ஏற்பாடு செய்தார்.
ஜோசப் மைக்கல் பெரேரா அமர்ந்தவுடன், “உங்க வீட்டுக்கு ஏன் பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை?” என்று ரணில் கேள்வி எழுப்பியதும், “இல்லை சேர், நான் இப்போது அரசியலில் ஈடுபடுவதில்லை” என்று பதிலளித்தார். அது எப்படி? அதுவும் முன்னாள் சபாநாயகராகவும் அமைச்சராகவும் இருந்தவர் நீங்கள். உங்களின் பாதுகாப்பிற்காக பல காவல்துறை அதிகாரிகளின் சேவை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று ரணில் தெரிவித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்களை தேடிச் செல்லும் ரணில்
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் நடவடிக்கைகளை மீண்டும் புத்துயிரூட்டும் முயற்சியில் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரை தேடிச் சென்று ஒன்று திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இதன் ஒரு அங்கமாகவே ஜோசப் மைக்கேல் பெரேராவின் வீட்டிற்கு சென்றிருந்தார். மீண்டும் அரச அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் ரணில் கட்சியை மறுசீரமைத்து ஆளும் கட்சி உறுப்பினர்களை நெருக்கமாக்கப் போகிறாரா என்பது தெரியவில்லை.
நாடாளுமன்றத்தில் கடந்த 23 ஆம் நாள் சிறப்பு விசேட அறிக்கையொன்றை விடுத்த ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தைக் கலைக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த அரச தலைவர், நாட்டில் அடிக்கடி தேர்தல்கள் நடத்தப்படுவதால் மக்கள் சலிப்படைந்துள்ளதாகவும், அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளால் மக்கள் சலிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.