இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் அதிவீரியம் கொண்ட டெல்டா (பி.1.617.2) கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஐவர் கொழும்பு, தெமட்ட கொடைப்பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சந்திமஜீவந்தர தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் எழுந்த மானமாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் குறித்த ஐவரும் சமூகத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி டெல்டா திரிவுடன் கூடிய தொற்றாளர்கள் இலங்கையில் சமூகத்திலிருந்து அடையா ளம் காணப்பட்ட முதல் சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது. கடந்த முறை அடையாளம் காணப்பட்ட பி. 117 வைரஸ் பிரிவை விடவும், தற் போது அடையாளம் காணப்பட்டுள்ள பி.1.617.2 என்ற வைரஸ் 50 வீதம் அதிக வீரியம் கொண்டது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனாத் தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுக்கொண்டவர்களுக்கும் இந்த வைரஸ் பரவும் அபாயம்காணப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக டெல்டா கொரோனா திரிவினால் பாதிக்கப்பட்ட இருவர் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டிருந்தனர். ஆனால், அவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த நிலையிலேயே அந்தத் தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர்.
இதேவேளை, பிரிட்டனின் அல்பா கொரோனா வைரஸ் திரிவு தொற்று உறுதியான 8 பேர் காலி, மட்டக்களப்பு, கொழும்பு06, கொழும்பு 08 மற்றும் கொழும்பு 10 ஆகிய இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தரமேலும் கூறியுள்ளார்.