நாட்டில் தொடரும் பயணத் தடை மற்றும் முடக்கம் காரணமாக பசியில் வாடும் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, முடிந்தளவு நிதி உதவி செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் உள்ளூர் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக தொடரும் பயணத் தடைகள் மற்றும் முடக்கம் காரணமாக பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் உண்ண உணவின்றி பெருந் துன்பங்களை அனுபவித்து வருகின்ற நிலையில், எம்மால் முடிந்தளவுக்கு வெளிநாடுகளில் இருக்கும் ஆதரவாளர்கள், தெரிந்தவர்களின் உதவிகளுடன் சில உதவிகளை நாம் செய்து வருகின்றோம்.
அதேபோல, ஏனைய கட்சிகளும் தம்மால் முடிந்தளவுக்கு மக்களுக்கு உதவிகளைச் செய்து வருகின்றார்கள். ஆனால், இந்த உதவிகள் எல்லாமே “யானைப்பசிக்கு சோளப்பொரி” போலவே இருக்கின்றன.
எம்மால் முடிந்தளவுக்கு எமது சக உறவுகளின் பசியைப் போக்கி இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர்களுக்கு உதவி செய்யவேண்டிய பெரும் பொறுப்பு எம் எல்லோருக்கும் இருக்கின்றது.
“நம்பிக்கைப் பொறுப்பு” என்ற எமது பதிவு செய்யப்பட்ட நன்கொடை அமைப்பின் ஊடாக இவ்வாறு அல்லலுறும் மக்களுக்கு எம்மால் முடிந்தளவுக்கு நிவாரண உதவிகளைச் செய்வதற்கு திட்டமிட்டிருக்கின்றோம்.
“நம்பிக்கைப் பொறுப்பு” என்பது முற்றிலும் ஒரு நன்கொடை அமைப்பு. இதன் ஊடாக கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் ஏற்கனவே நாம் நிவாரணம் வழங்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.
தயவுசெய்து உங்களால் முடிந்தளவு நிதி உதவியினை, நாம் முன்னெடுக்கும் கொரோனா நிவாரணப் பணிகளுக்கு வழங்கி உதவுமாறு உங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.” என்று அவர் அந்த அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.