இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவர் பதவிக்கு ஜூலி ஜியூன் சங், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முன்மொழிந்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றும் அலெய்னா டெப்லிஸின் மூன்று ஆண்டு பதவிக்காலம் ஒக்டோபர் 22 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில், புதிய தூதுவராக ஜூலி ஜியூன் சங்கை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நியமிக்க தீர்மானித்துள்ளார்.
இலங்கை உள்ளிட்ட 9 நாடுகளுக்கான புதிய தூதுவர்களின் நியமனங்கள் தொடர்பான அறிவிப்பு வெள்ளை மாளிகையினால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய அமெரிக்க இராஜாங்கச் செயலர் அன்ரனி பிளிங்கனின் மூத்த ஆலோசகராகப் பணியாற்றும் ஜூலி ஜியூன் சங் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான புதிய தூதுவர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளார்.
அமெரிக்க வெளிவிவகாரச் சேவையின் மூத்த அதிகாரியான இவர், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மேற்கு அரைக்கோள விவகாரங்களுக்கான பதில் உதவிச் செயலாளராகவும் பதவி வகித்திருந்தார்.
சீனா, ஜப்பான், கம்போடியா, ஈராக், வியட்நாம் ஆகிய நாடுகளிலும் பணியாற்றியுள்ள இவர், தென்கொரியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர் என்பதோடு ஐந்து மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்டுள்ள ஜூலி ஜியூன் சங்கின் பெயர் அமெரிக்க பாராளுமன்ற வெளிவிவகாரக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே, இந்த நியமனம் உறுதிப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.