எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு மத்தியில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்கேற்காமல் தவிர்த்துக் கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை கூட்டத்துக்கு பிரதமர் மகிந்த ராஜபக்சவே தலைமை தாங்கியுள்ளார். இந்தக் கூட்டத்தில் எரிபொருள் விலைகளை குறைக்க வேண்டும் என்று அமைச்சர் சமல் ராஜபக்ச, வலியுறுத்தியுள்ளார் என்றும், இதற்கு அமைச்சர்கள் பலரும் சார்பான கருத்துக்களை முன்வைத்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
அதேவேளை, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக முக்கியமாக கலந்துரையாடப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமைச்சரவைக் கூட்டத்தில் இதுபற்றிக் கலந்துரையாடப்படாதமை குறித்து, ஊடகங்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.