பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெறக்கூடிய மோசமான பாதையில் இலங்கை பயணித்துக்கொண்டிருப்பது பற்றிய மிகச்சரியானதும் ஆழமானதுமான கருத்துக்களையும் கரிசனையையும் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வெளிக்காட்டியிருக்கிறது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே தற்போதைய நிலைவரங்கள் தொடர்பில் சர்வதேசப் பங்காளிகள் கரிசனையுடன் அவதானித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை இலங்கை நன்கு உணர்ந்துகொள்ள வேண்டியது அவசியமாகும் என்றும் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, இலங்கையில் அதிகரித்துவரும் மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்தும் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதுடன் அவற்றின் காரணமாக பரஸ்பர வர்த்தகத்தொடர்புகள் இல்லாமல்போகும் சாத்தியங்களும் உள்ளன என்ற முக்கியமான செய்தியை ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றம் வெளிப்படுத்தியிருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது, தன்னிச்சையான தடுத்துவைத்தல்கள், சித்திவதைகளுக்கு உட்படுத்தப்படல் மற்றும் பாலியல் வன்முறைகள் ஆகியவற்றுக்கு ஏதுவாக அமையக்கூடிய பயங்கரவாத்தடைச்சட்டம் குறித்த கரிசனைகளை வெளிப்படுத்தியிருக்கிறது.
இந்தச் சட்டத்தின் ஊடாக சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் எழுத்தாளர்களை அரசாங்கம் இலக்கு வைக்கிறது. பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பிரபல சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் கவிஞர் அஹ்னாப் ஜசீம் ஆகியோர் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கையில் நீண்டகாலமாக நடைபெற்ற போரின் போது இடம்பெற்ற பாரிய மனித உரிமைமீறல் சம்பவங்களுக்கான நீதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக அரசாங்கம் செயற்படுவது குறித்தும் அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலப்பகுதியில் மனித உரிமைமீறல் செயற்பாடுகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்களுக்குள்ளான இராணுவ அதிகாரிகள் தற்போதைய அரசாங்கத்தில் முக்கிய பதவிகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருப்பது பற்றியும் அதில் கூறப்பட்டுள்ளது.
போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த எதிர்கால விசாரணைகளின்போது பயன்படுத்துவதற்காக ஆதாரங்களை சேகரித்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான புதிய தீர்மானமொன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கடந்த மார்ச் மாதத்தில் நிறைவேற்றியது.
மீண்டும் பாரிய மனித உரிமைமீறல் சம்பவங்கள் இடம்பெறக்கூடிய மோசமான பாதையில் இலங்கை பயணித்துக்கொண்டிருப்பது பற்றிய மிகச்சரியானதும் ஆழமானதுமான கருத்துக்களையும் கரிசனையையும் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வெளிக்காட்டியிருக்கிறது.
அதேவேளை இன,மதரீதியான சிறுபான்மையின சமூகத்தின்மீது பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகள், மாற்றுப்பாலின சமூகத்தின் நிலை மற்றும் ஆடைத்தொழிற்சாலைகளில் பணியாற்றுவோரின் தொழிலாளர் உரிமைகள் மீது ஏற்பட்டிருக்கும் அழுத்தங்கள் ஆகிய விடயங்கள் தொடர்பிலும் குறித்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சந்தைகளை இலகுவாக அடையக்கூடியவாறான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைக் கடந்த 2017 ஆம் ஆண்டில் இலங்கை பெற்றுக்கொண்டது. அதற்குப் பதிலாக சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனங்களுக்கு ஏற்றவாறான பயங்கரவாதத்தடைச்சட்டத்தை மாற்றியமைத்தல் என்பது இலங்கையின் முக்கிய கடப்பாடு என்பதுடன் இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரங்களை மேம்படுத்துவதற்கான அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான கருவியாக ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பயன்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியை ஆணைக்குழு ஏற்கனவே வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையில் பயங்கரவாத்தடைச் சட்டத்தைத் திருத்தியமைத்தல் அல்லது இல்லாதொழித்தல் தொடர்பில் ஒத்துழைப்பை வழங்குவதற்கான ஐ.நாவின் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் நிதியுதவி குறித்து ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு உடனடியாக மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியப்பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனவே தற்போதைய நிலைவரங்கள் தொடர்பில் சர்வதேசப் பங்காளிகள் கரிசனையுடன் அவதானித்துக்கொண்டிருக்கிறார்கள். என்பதையும் அடிப்படை மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கு நட்புறவு நாடுகள் உதவிகளை வழங்கத்தயாராக இருக்கின்றன என்பதையும் இத்தருணத்தில் இலங்கை உணர்ந்துகொள்வது அவசியமாகும்.