சமையல் எரிவாயு விலையை 400 ரூபாவால் அதிகரிக்குமாறு நிறுவனங்கள் கேட்டிருந்தபோதும் அதற்கு இணங்கவில்லை. அது தொடர்பான மேலுமொரு பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
சமையல் எரிவாயு விலையை 400 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என கேஸ் நிறுவனங்களின் கோரிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கேஸ் நிறுவனங்களை தொடர்ந்து கொண்டு செல்வதாக இருந்தால், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை குறைந்த பட்சம் 400 ரூபாவால் அதிகரிக்கவேண்டும் என்ற பிரேரணை ஒன்று கேஸ் விலை தொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல, மஹிந்த அமரவீர, டளஸ் அலகப்பெரும,உதய கம்மன்பில, ராஜாங்க அமைச்சர் லசன்த்த அழகியவண்ண மற்றும் லிட்ரோ மற்றும் லாப் கேஸ் நிறுவனங்களின் பிரதானிகள் உட்பட நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இதன்போதே கேஸ் நிறுவனங்களின் பிரதானிகளால் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் டொலரின் பெறுமதி கூடியுள்ளமை மற்றும் உலக சந்தையில் எரிவாயு விலை பாரியளவில் அதிகரித்துள்ளமை போன்ற காரணங்களின் அடிப்படையில் இதற்கு முன்னர் கேஸ் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 751 ரூபாவால் அதிகரிக்கவேண்டு என்றே கோரிக்கை விடுத்திருந்தனர். இருந்தபோதும் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, குறைந்த பட்சம் 400 ரூபாவினால் விலை அதிகரிக்கப்படாவிட்டால், கேஸ் நிறுவனங்களை கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்படும் என அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
எனினும் நாட்டின் தற்போதைய நிலையில் எரிவாயு விலை அதிகரிப்பை மேற்கொள்வதால் நுகர்வோர் பாரியளவில் பாதிக்கப்படுவார்கள். அதனால் எரிவாயு விலை அதிகரிக்க இதுவரை நாங்கள் அனுமதி வழங்கவில்லை. அதேபோன்று கேஸ் நிறுவனங்கள் வங்குரோத்து நிலையை அடையாமல் தொடர்ந்து கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டி உள்ளது.