வெளவால்களில் இருந்து மொத்தம் 24 கொரோனா வைரஸ்களை சேகரித்துள்ளதாக சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்தது. இது பல்வேறு விதமாக உருமாறி 2 ஆவது, 3ஆவது அலையாக சில நாடுகளில் வீரியமாகவும் பரவி வருகிறது. இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய வகை கொரோனா வைரஸ்களை காடுகளில் இருந்து சேகரித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
வெளவால்கள் மத்தியில் எத்தனை கொரோனா வகைகள் உள்ளன என்பது குறித்தும் அதில் எத்தனை வகைகள் மனிதர்களுக்குப் பரவும் அபாயம் உள்ளது என்பது குறித்தும் கண்டறிய இது உதவும் எனச் சீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜெர்னல் செல் இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரையில், வெளவால்களில் இருந்து மொத்தம் 24 கொரோனா வைரஸ்களை நாங்கள் சேகரித்துள்ளோம். அதில் நான்கு கொரோனா வகைகள் தற்போது பரவும் கொவிட்-19 வைரசுக்கு ஒத்து இருந்தது,’ என அதில் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2019 மே மாதம் முதல் 2020 நவம்பர் மாதம் வரை சீனாவின் சிறிய காடுகளில் வசிக்கும் வெளவால்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. வெளவால்களின் கழிவு மற்றும் வாயிலிருந்து எடுக்கப்பட்ட எச்சில்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.