அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை வாங்க அவுஸ்ரேலியாவின் ஆதரவை இலங்கை கோரியுள்ளது.
இந்த விடயம் குறித்து அவுஸ்ரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் மரைஸ் பெய்னுடன் தொலைபேசியில் உரையாடியபோதே இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த கோரிக்கையினை முன்வைத்தார்.
மேலும் இதன்போது கொரோனா தொற்றால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதில் இலங்கைக்கு அவுஸ்ரேலியா வழங்கிய ஆதரவுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.
ரூ. 1,787 மில்லியன் அத்தியாவசிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியமை உள்ளிட்டவற்றிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா இடையே இருதரப்பு உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 75 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொருத்தமான திட்டங்களை தொடங்க அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.
இலங்கை தரப்பில் ஒரு குறிப்பிட்ட வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதமாக இலங்கை கடலில் எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தணிக்க இலங்கைக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்க அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் முன்வந்தார்.
இதேவேளை, இலங்கை அரசு ஏற்கனவே அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் இதே போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.