சீன-இலங்கை நட்புறவின் மூலம் உயிர் மலர்களை கூட்டாக ஊட்டி வளர்ப்போம் என்று இலங்கைக்கான சீன தூதுவர் ச்சி சென்ஹொங் தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் சீன உதவியுடன் கட்டப்பட்ட சிறுநீரகவியல் மருத்துவமனையின் அங்குராட்பன நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இன்று, இலங்கை மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்த நல்ல நாளாகும். சீன-இலங்கை உறவின் வரலாற்றில் பதிவு செய்யத்தக்க நல்ல நாளும் ஆகும். கொரோனா நோய் தொற்று கடுமையாக இருக்கும் பின்னணியில், வரலாற்றுச் சிறப்புமிக்க நகரான பொலோனருவாவில் ஒன்றுகூடி, சீன-இலங்கை நட்பு மருத்துவனை,
தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவமனையின் துவக்க விழாவில் கலந்து கொண்டிருக்கின்றோம். கடந்த சில ஆண்டுகளாக இருதரப்பும் பல்வகை இன்னல்களை, குறிப்பாக கொரோனா பாதிப்பைச் சமாளித்து வருகின்றன.
இம்மருத்துவமனை பயன்பாட்டுக்கு வருவதென்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. முதலில், பழம் பெரும் பொலோனருவா நகருக்கு இது புதிய அடையாளச் சின்னமாக திகழ்கிறது. இரண்டாவதாக, இலங்கையில் ஆயிரக்கணக்கான சிறுநீரக நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு நம்பிக்கை தருகிறது. மூன்றாவதாக, இம்மருத்துவமனை தெற்காசியாவில் உள்ள 175 கோடி மக்களுக்கு நன்மை கொண்டு வரும்.
சீன-இலங்கை நட்புறவின் புதிய அடையாளமாக விளங்கும் இம்மருத்துவமனை, சீன உதவியுடன் கட்டப்பட்ட பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம், உச்ச நீதிமன்றக் கட்டிடம், தேசியக் கலை அரங்கு, கண்டி நீர்த் தொழில் நுட்ப ஆய்வுக்கான செயல்விளக்க மையம் போன்ற திட்டப்பணிகளைப் போல் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு, இருநாட்டு மக்களின் ஆழ்ந்த நட்புறவைத் தொடர்ந்து பரவல் செய்யும்.
இலங்கைக்கு உதவி தேவைப்படும் போதெல்லாம் சீனா எப்போதுமே முந்தி வந்து உதவியளிக்க தவறியதில்லை. இருநாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 64 ஆண்டுகளில், சீனா எத்தகு நிலைமையில் இருந்தாலும், எத்தகைய உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைமையை எதிர்கொண்டாலும், இலங்கையுடன் நேர்மையாகப் பழகி, சமத்துவ நிலையில் ஒன்றுக்கொன்று நம்பிக்கை தந்து, கூட்டாக இன்னல்களைச் சமாளித்து வருகிறது.
தற்போது வரை, சீனாவின் உதவியுடன் இலங்கையில் கட்டிமுடிக்கப்பட்ட மற்றும் கட்டுமானத்தில் உள்ள திட்டங்களின் எண்ணிக்கை 116. இவற்றில் 36 பெரிய ரக திட்டங்களும் அடக்கம். இதன் பொருட்டுப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 8000 பேருக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சீனாவின் உள்ளூர் அரசுகள், தொழில் நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் பல்வேறு வழிமுறைகளின் மூலம் இலங்கையின் சமூக வளர்ச்சி மற்றும் மக்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்கு இயன்ற அளவில் ஆதரவளித்து வருகின்றனர்.
கொரோனா நோய் பரவலுக்குப் பிந்தைய பல்வேறு கட்டங்களிலும், சீன அரசு இலங்கைக்கு அவசர உதவியை வழங்கியது. கோடிக்கும் மேற்பட்ட தனிநபர் பாதுகாப்புச் சாதனங்கள், இலட்சத்துக்கும் மேலான நியூக்ளிக் அமிலச் சோதனை கருவிகள் வழங்கப்பட்டன. இவை தவிர, 11 லட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகளைச் சீனா இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
மேலும், கரோனா தடுப்பூசிகளை வணிகக் கொள்வனவு செய்வதிலும், உள்ளூரில் சீனத் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதிலும் சீனா இலங்கைக்கு இயன்ற அளவில் உதவியளித்து வருகிறது. இருநாட்டு அரசு மற்றும் மக்களின் கூட்டு முயற்சியுடன், புதிய ரக கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் நாம் வெற்றி பெறுவோம். சீன – இலங்கை நட்புறவு போராட்டத்தில் மேலும் உயர் நிலையை எட்டி இருநாட்டு மக்களுக்கு மேலதிக நன்மைகளைக் கொண்டு வர முடியும் என நம்புகின்றோம்.