சிரியா மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
சிரியாவில் இருந்தவாறு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வரும், ஈரான் ஆதரவு படையினரை அழிக்க இஸ்ரேல் ராணுவம் அவ்வப்போது வான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தநிலையில், சிரியாவின் ஹோம்ஸ் நகரத்தில் உள்ள ஹிர்பெட் அல் டின் என்ற கிராமத்தில் உள்ள இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் வான்படையினர் நேற்றிரவு அதிரடி தாக்குதல் நடத்தினர்.
இந்த பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளங்களும் செயல்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் சிரிய இராணுவத்தினர் 7 பேரும், தேசிய பாதுகாப்பு படையினர் 4 பேரும் என மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சிரியாவில் செயல்பட்டு வரும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
டமாஸ்கஸ் மீது இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ள சிரிய அரசு, இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை.