கொவிட் -19 இனங்காணப்பட்டவர்களை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு ஏற்றிச் சென்று கொண்டிருந்த பஸ், யாழ் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரை மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். மட்டுவில் சந்திரபுரன் வட்டன் வேலாயுதம் (70) உயிரிழந்தவராவார்.
இந்தச் சம்பவத்தையடுத்து அங்கு நின்றவர்கள் பஸ்கள் மீது கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதன்போது பஸ்ஸின் பாதுகாப்புக்கு சென்ற இராணுவத்தினர் கற்கள் எறிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டதால் குழப்பநிலை ஏற்பட்டது. இந்தச் சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது.
தென்னிலங்கையிலிருந்து 5 பஸ்களில் கொவிட்-19 தொற்றாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தனர். இதன்போது மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக துவிச்சக்கர வண்டியில் பயணித்த விவசாயி ஒருவரை அந்த பஸ்களில் ஒன்று மோதியதில் அவர் வீதியில் வீழ்ந்துள்ளார்.
சுயநினைவற்ற அவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் பஸ்களுக்கு கற்கள் எறியப்பட்டன. இதன்போதே பஸ்களில் பாதுகாப்புக்காகப் பயணித்த இராணுவத்தினர் கற்கள் வீசியோர் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டனர்.
இதனையடுத்து மேலும் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டனர். இதனையடுத்து கற்கள் வீசினார்கள் என்ற குற்றச்சாட்டில் நால்வரை பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர். சம்பவத்தையடுத்து விபத்துக்குள்ளான பஸ் தவிர்ந்த ஏனைய 4 பஸ்களும் அங்கிருந்து அனுப்பப்பட்டன.