ஜேர்மனி, பிராங்போர்ட் விமான நிலையத்தில் தமிழர்கள் உட்பட பெருந்தொகையானவர் முன்னெடுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு மத்தியில் சுமார் 20 தமிழர்கள் நேற்றிரவு பலவந்தமாக தனி விமானம் ஒன்றில் ஏற்றப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்கள்.
அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களே இவ்வாறு நாடுகடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாடு கடத்தப்படுவதற்காக போட்ஸ்ஹைம் நகரில் அமைந்துள்ள தடுப்பு முகாமிலிருந்து இவர்கள் நேற்று நண்பகல் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் பிராங்போர்ட் கொண்டுவரப்பட்டனர்.
இந்தக் கடுமையான போராட்டத்துக்கு மத்தியில் பொலிஸ் பாதுகாப்புடன் வாகனம் ஒன்று தடுப்பு முகாமுக்கு உள்ளே வந்து அகதிகளை ஏற்றிக் கொண்டு விமான நிலையம் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்த வாகனத்தைச் செல்லவிடாமல் தடுக்க ஆர்ப்பாட்டக் காரர்கள் முயன்ற போதிலும், கடுமையான பொலிஸ் பாதுகாப்புடன் வாகனம் வெளியேறியது.
பிராங்போர்ட் விமான நிலையத்திலும் பெருந்தொகையான தமிழர்களும், ஜேர்மன் நாட்டவர்கள் சிலரும் இணைந்து எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் நேற்றிரவு விஷேட விமானம் ஒன்றின் மூலம் நாடு கடத்தப்பட்டதாக பிராங்போர்ட் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளையில், நாடு கடத்தப்படுவதற்காகத் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களில் நேற்று முன்தினம் ஒருவரும் நேற்று ஒருவருமாக இருவர் விடுதலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.