தற்போதைய முதல்வர் சட்டத்தரணியாக இருக்கின்ற போதும் எந்த சட்ட அதிகாரம் யாருக்கு உள்ளது என்பதை அறியாதவராக இருக்கின்றார். அத்துடன் நிதி, நியமனங்களில் முறைகேடுகள் தொடருகின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபைஉறுப்பினர் லோகதயாளன் TALK WITH TAMILPRESS24 இக்கு தெரிவித்தார்.
அதன் முழுவடிவம்வருமாறு.
கேள்வி:- மாநகர சபையில் முன்னாள் முதல்வர் 2020ஆம் ஆண்டு வட்டாரங்களிற்கு ஒதுக்கிய நிதியை விட தற்போதைய முதல்வர் அதிகம் ஒதுக்கி சபை அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்புச் செய்துள்ளாரா?
பதில்:- ஒதுக்கியதாக ஒரு மாயை காட்டப்பட்டது அதாவது வட்டாரத்திற்கு 3, உறுப்பினருக்கு ஒன்று ஆனால் இன்று உறுப்பினருக்கு ஒரு மில்லியனிற்கான பணி மட்டுமே இடம்பெறுமாம் ஆனால் எந்த பணியும் இதுவரை இடம்பெறவில்லையே.
கேள்வி:- புதிய முதல்வர் பல அதிரடி அறிவிப்புக்கள், நடவடிக்கைகள், கட்டுப்பாட்டு வர்த்தமானிகள் எல்லாம் வெளியிடுவது சபையின் வளர்ச்சியை காட்டுவதாக கொள்ளலாமா ?
பதில்:- தற்போதைய முதல்வர் அதிரடி அறிவித்தலை வெளியிடுகின்றார் என்பதனை விட அடிதடி அறிவித்தலை விடுகின்றாறோ என எண்ணத் தோன்றுகின்றது. அதுமட்டுமல்ல முதல்வர் ஒரு சட்டத்தரணி ஆனால் எந்தச் சட்ட அதிகாரம் யாருக்கு அதிகாரம் வழங்குகின்றது என்பதுகூட தெரியாமலேயே எமது முதல்வர் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளார்.
கேள்வி:- சபைக்காக இடம்பெறும் பணிகளான நகர மண்டபம், கலாச்சார மண்டபம் என்பவற்றை அடிக்கடி போய் பார்வையிட்டு வழிகாட்டுவது சபைக்கு உகந்த விடயம்தானே?
பதில்:- இதிலே நீங்கள் குறிப்பிட்ட எந்தப்பணியிலும் இவர்களின் எந்தப் பங்களிப்பும் கிடையாது. ஆனால் கூட்டமைப்பின் பங்களிப்பு மிக உச்சமாக இருந்தது . அதிலும் மாநகர சபைக்கான புதிய கட்டிடமான நகர மண்டபம் அமைப்பிற்கு எந்தக் கட்சியும் உரிமைகோர முடியாத கூட்டமைப்பின் தனி முயற்சி.
இதில் விசேடமாக கூறுவதானால் இதன் ஆரம்ப விழாவை புறக்கணித்தது மட்டுமல்லாமல் அந்த விழாவிற்கு வந்த விருந்தினர்களிற்கான உபசரணை செலவைக்கூட வழங்க விடாது எதிர்த்து வாக்களித்தவர்கள் இதே முதல்வரின் அணியும் ஈ.பீ.டீ.பியும்தான்.
கேள்வி:- பழைய முதல்வரின் காலத்தில் சபையின் நடவடிக்கைக்கு புறம்பான பணிகள் இடம்பெற்றதாக எதிர்க் கட்சிகளால் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அவை புதிய முதல்வரின் ஆட்சியில் இல்லையல்லவா?
பதில்:- உள்ளூராட்சி சபைகளில் எதிர்க் கட்சி என ஒன்று இல்லை என்பது எனது நீண்டநாள் கருத்து. இதேநேரம் முன்னாள் முதல்வரின் காலத்தில் எதிரான கருத்துக்களையே கூறிவந்தனர் அதனால் அது மட்டுமே வெளியே வந்தன. அதனால் நாமும் எதிரான கருத்தை மட்டும் கூற முடியாது.
இருப்பினும் கேட்டதற்காக சிலதை பட்டியல் இடுகின்றேன். பழைய முதல்வர் சபை எல்லைப் பரப்பிற்குள் மக்கள் நலத்திட்டத்திற்கும் படையினரை ஈடுபடுத்தக் கூடாது என்றவர்களின் ஆட்சியில் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு எங்கே ஏனெனில் வீதிகளுக்கும் பொது இடத்திற்கும் இராணுவம்தான் கிருமி நீக்கி மருந்து விசுறுகின்றது.
இரண்டாவது எமது சபை வாகனத்தில் எமது எரிபொருள் எமது சம்பளம் வழங்கி கிளிநொச்சியில் உள்ள இராணுவத்தினருக்கு பயிற்சி வழங்க எமது ஊழியர்கள் செல்கின்றனர்.
பொதுப் பணியில் பணம் செலுத்தி செய்யும் சேவையில் பிரயாணத்திற்கு 5 ஆயிரம் ரூபா செலுத்தும் திட்டத்திற்கு பிற மாவட்டத்திற்கு 10 ஆயிரம் ரூபா செலவுசெய்து எமது ஊழியர்கள் சென்று வருகின்றனர். இன்னும் பட்டியலிடலாம் இருப்பினும் எமது சபை என்ற எண்ணம் தடுக்கின்றது.
இவற்றிற்கும் அப்பால் சபையின் தீ அணைப்பு வாகனம் குடாநாட்டிற்கு ஜனாதிபதி, பிரதமர் வந்தால் எமது தீ அணைப்பு வாகனம் அவர்கள் பின்னால் இலவசமாகவே திரியும். ஆனால் இந்த நடைமுறை கொழும்பில் கூட கிடையாது. மட்டக்களப்பிலே 10 ஆயிரம் ரூபா செலுத்தி அட்டையிட்டாளே வாகனம் வெளியே செல்லும். இதனை நிதிக் குழுவிலும் சபையிலும் போட்டு தீர்மானமாகவும் நிறைவேற்றியது எனது முயற்சி ஆனால் வர்த்தமானி அறிவித்தலின்போது அந்த விடயம் மட்டும் நீக்கப்பட்டுள்ளது.
கேள்வி:- அவ்வாறானால் பழைய முதல்வரின் ஆட்சிக் காலத்தில் அல்லது முதல்வரின் ஆட்சியில் எந்தப் பிழையோ அல்லது நிதி விரயமோ இடம்பெறவில்லை என்கின்றீர்களா?
பதில்:- பழைய முதல்வர் என்றாலும் இருவர் சபையில் உள்ளனர். இருவர் தொடர்பிலும் கூறுவதானால் ஒருவர் சபையில் 5 இலட்சம் முற்பணம் பெற்று சில ஊழியர்களிற்கு தனிப்பட்ட நலனுக்காக துவிச்சக்கர வண்டி வழங்கிய முற்பணத்தை 3 மாதங்களில் செலுத்துவேன் என எழுத்தில் சபைக்கு தெரிவித்தும் ஒரு வருடம் கடந்து விட்டது இருப்பினும் வழங்கவில்லை.
இரண்டாவது முன்னாள் முதல்வர் தனது பணிக்காக அதனை விஞ்சிய தொகையில் 6 இலட்சத்தில் ஓர் மடிக் கணனியை வாங்கினார் தற்போது என்னவென்றால் அதன் கடவுச் சொல்லை மறந்து விட்டாராம். இவை சபைக்கு உகந்த விடயம் அல்ல. இருவருமே அவற்றை தாமாகவே சரி செய்ய வேண்டும் அதுதான் அவர்கள் வகித்த பதவிக்கு உரிய பண்பாகும்.
கேள்வி:– மாநகர சபைக்கு 3 ஊழியர்களை சபையின் அனுமதி இன்றி இரகசியமாக தனது கட்சி மற்றும் ஈ.பீ.டீ.பி உறுப்பினரின் பிள்ளைகளிற்கு வழங்கியதாக சபையிலே நீங்கள் குற்றம் சாடினீர்கள் அது உண்மையா? உண்மையாயின் அது தற்போது என்ன நிலைமையில் உள்ளது?
பதில்:- இது அப்பட்டமான உண்மையான விடயம். இரு சபையில் அதிகம் பேசப்பட்ட விடயம். இருப்பினும் அவர்கள் செய்த அதே விடயத்தை நானும் செய்ய விரும்பாத காரணத்தால் விமர்சிப்பதனை தவிர்க்கின்றேன்.
கேள்வி:– சபையிலே எதிர்க் கட்சி என்று ஒன்று இல்லை என்கின்ற நீங்கள் சபையை சிறந்த முறையில் நடாத்தி மக்களிற்கு சேவையாற்ற புதிய முநல்வருக்கு எந்த வகையிலாவது உதவி இருக்கீன்றீர்களா? அல்லது ஆலோசணை வழங்கியுள்ளீர்களா?
பதில்:- ஒரு திட்டத்தின் ஊடாக 3 மில்லியனை பெற முடியும் அதற்கு எந்த திட்டத்தினை மேற்கொள்வது என்ற இழுபறி அல்லது மாறுபட்ட கருத்து எழுந்தபோது அதில் பிரதானமாக வாய்க்காலை தூர்வாரலாம் என ஏற்க வைத்தேன்.
இரண்டாவது சபைக்கு 10 உழவு இயந்திரம் கொள்வனவு செய்ய வேண்டும் என நிதி தேடியபோது அதிக நிதி இன்றி கமநல சேவை திணைக்களத்தின் ஊடாக இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும் . அதற்கு உடன் ஓர் கடிதம் மட்டும் வழங்கினால் போதும் என ஆலோசனை கூறியதன் பெயரில் கடிதம் அனுப்பி அதற்கான நடவடிக்கை இடம்பெறுகின்றது.
கேள்வி:- சபையின் தீ அணைப்பு வாகனம் விபத்து ஆனது முதல் தவறான காப்புறுதியினால் அந்த வாகனம் சபைக்கு கிடைக்கவே மாட்டாது என ஆரம்பம் முதலே நீங்கள் தெரிவித்து வருகின்றீர்கள் . அதன் நிலமை என்ன ? வாகனம் கிடைக்குமா ?
பதில்:- நான் அன்று கூறியதனையே இன்றும் கூறுகின்றேன். அந்த வாகனம் திருத்தவும் முடியாது, அதற்குப் பதிலாக காப்புறுதி நிறுவனம் புதிய வாகனம் வழங்கவும் மாட்டாது, சபையின் நிதியில் திரட்டினாலும் அதே தரம் இருக்கவும் மாட்டாது. ஆக மொத்தம் அதிகாரிகளின் சிறு, சிறு தவறு பெரு வெள்ளமாக வந்து தீ அணைப்பு வாகனத்தை அடித்துச் சென்று விட்டது.
கேள்வி:- தற்போது பாவனையில் உள்ள தீ அணைப்பு வாகனம் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பிக்கப்படுகின்றதா?
பதில்:- அந்த வாகனம் உண்மையில் புதிய வாகனத்தை கண்டதும் கை விட்ட வாகனம். இருப்பினும் ஓர் அளவு செய்து சாதரண பாவனையில் எடுத்த நிலையில் கடந்த மே 23 ஆம் திகதி நயினாதீவில் வெசாக் பண்டிகை இடம்பெற்றால் ஜனாதிபதி வருவதாக இருந்தது . ஆனால் வாகன வெளித்தோற்றம் வடிவு இன்றிக் காணப்பட்டதனால் ஜனாதிபதியுடன் பயணிக்க வடிவிற்காக வர்ணம் தீட்ட அவசர அவசரமாக அனுப்பப்பட்டது.
கேள்வி:- மாநகர சபையில் உழவு இயந்திரம் வாடகைக்கு அமர்த்திய விடயம் உட்பட 3 விடயம் நிதி, நிர்வாக விதிமுறைகளிற்கு முரணானது என முறையிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதன் உண்மைத் தன்மை என்ன?
பதில்:- உண்மையில் இந்த விடயம் நிதிக் குழுவிற்கு வந்தபோதே நான் கடுமையாக எதிர்த்தேன் அப்போது மணிவண்ணன் சார்பு உறுப்பினர் அவற்றை எடுத்துக் சரியென கடுமையாக வாதாடினார். இருப்பினும் அவர்கள் அணியை சார்ந்தவர்கள் அதிகம் என்ற அடிப்படையில் நிதிக் குழுவால் சபைக்கு சிபார்சு செய்யப்பட்டது.
இன்னமும் சபை அனுமதி வழங்கவில்லை. ஆனால் உழவு இயந்திரங்கள் இதன் அடிப்படையிலேயே சேவையில் ஈடுபடுவதனால் தற்போது முறையிடப்பட்டு கணக்காய்வுத் திணைக்களத்திற்கு விடயம் பாரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் பதிலின் மூலம் யார் சரியான விதிமுறையை அல்லது சரியான சட்டத்தை கூறியவர்கள் என்பது தெரிய வரும்தானே.
கேள்வி:- மாநகர முதல்வரின் சம்பள விடயம், வாகனச் சாரதி கோரியமை போன்ற விடயங்களில் உங்கள் சக உறுப்பினர் ஒருவர் குற்றம் சுமத்துகின்றார். ஆனால் முதல்வரின் சக உறுப்பினர் மறுக்கின்றார் இதில் யார் உண்மை உரைக்கின்றனர் என நீங்கள் கருதுகின்றீர்கள்?
பதில்:- இரு உறுப்பினர்களின் செவ்வியையும் நானும் பார்வையிட்டேன். ஒரு விடயத்தை குற்றச் சாட்டாக முன் வைக்கும்போது ஆவணமாக முன் வைத்திருக்கலாம். அல்லது மறுத்தவர் எனும் சான்றுடன் மறுத்திருக்கலாம் ஆனால் இதில் குற்றச் சாட்டு சரியானது அதனை ஆவண ரீதியில் என்னால் நிரூபிக்க முடியும்.