ஜேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளில் 20 பேரை அந்த நாட்டு அரசு இன்று புதன்கிழமை பலவந்தமாக நாடு கடத்துவதற்கு முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜேர்மன் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அங்குள்ள தமிழர்கள் 2ஆவது நாளாக நேற்றும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். இது ஜேர்மன் இவ்வருடத்தில் இலங்கைத் தமிழ் அகதிகளை திரும்பி அனுப்பும் இரண்டாவது நடவடிக்கை ஆகும். இந்த அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள போட்சைம் நகர் அகதி முகாமுக்கு முன்னால் நேற்றுமுன்தினம் மாலையில் இருந்து மழை மற்றும் கடும் குளிருக்கு மத்தியில் அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இன்று மாலை அளவில் பிராங்போட் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்படலாம் எனக் கருதப்படுவதால் இன்று மாலை அங்கும் போராட்டம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த மார்ச் 13ஆம் திகதியும் 25 இலங்கைத் தமிழ் அகதிகளை ஜேர்மன் பலவந்தமாக நாடுகடத்தியிருந்தது தெரிந்ததே.
இன்று நாடு கடத்தப்படவிருந்த ஒருவர் பிறீமனில் உள்ள மனித உரிமைகள் அமைப்பின் முயற்சியால் நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டார் என்றும் கூறப்பட்டது.