திருச்சி சிறப்பு முகாம் எனும் சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் கருணை கொலை செய்து விடக்கோரி இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக தமிழ்நாடு காவல் துறையால் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 78 பேர் உள்ளனர். தங்களை பொய் வழக்கில் கைது செய்தும் அந்த வழக்கிலும் தண்டனைக் காலத்திற்கே மேல் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். எனவே சட்டப்படி தங்களை விடுதலை செய்ய வேண்டும் கோரி பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சிறாப்பு முகாமில் உள்ள இவர்களுக்கு உணவுப்படியாக தினசரி ₹ 175 வழங்கப்படுகிறது. இதைக் கொண்டு அவர்களே சமைத்துக் கொண்டு வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில், ஒரு நாள் உணவுப்படி மற்றும் தங்களின் சேமிப்பில் இருந்தும் மொத்தம் ₹ 18, 000 முதலமைச்சரின் நிவாரண நிதியாக வருவாய்த்துறையினர் முன்னிலையில் அகதிகளுக்கான துணை ஆட்சியர் ஜெமுனாராணியிடம் கடந்த வாரம் வழங்கினர்.
இந்நிலையில், திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 78 பேர் தங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். குற்றத்திற்கான தண்டனை காலம் முடிந்தும் அகதிகளுக்கான சிறப்பு முகாம் என்ற பெயரில் தனி சிறையில் அடைத்து வைத்திருப்பவர்களை விடுவிக்க வேண்டும், இல்லாவிட்டால் தங்களை கருணை கொலை செய்ய மேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வருக்கு இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தங்களை விடுதலை செய்யக் கோரி 24ம் தேதி ஒரு நாள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தனித்துணை ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வாரத்தில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இந்நிலையில் திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இலங்கைத் தமிழர்களிடம் காவல் உதவி ஆணையர் மணிகண்டன், வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டம் நடத்தினால், வழக்குப் பதிவு செய்து, கைது செய்வோம் என்று போலீசார் மிரட்டுவதாக குற்றச்சாட்டி உள்ளனர்.