தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதால் ’தி பேமிலி மேன் 2’ தொடரை தடை செய்ய மத்திய அரசை மீண்டும் வலியுறுத்துவோம் என தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில், தகவல் தொழில்நுட்பத்துறை ஆய்வுக்கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் நீரஜ் மிட்டல், எல்காட் நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், கொரோனா பரவல் மற்றும் மரணங்களை குறைக்க முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மக்களின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
’தி பேமிலி மேன் 2’ தொடரில் தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதாக குற்றம் சாட்டிய அவர், அதனை தடை செய்ய வேண்டும் என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றும், அதனால் தான் மத்திய அரசுக்கு வலியுறுத்தியதாகவும், மீண்டும் வலியுறுத்தப்படும் என்றும் கூறினார்.