விவசாய அமைச்சின் செயலாளர் றோகண புஷ்பகுமார பதவியில் இருந்து விலகியுள்ளார்.
செயற்கை உரத்தை தடை செய்யும் அரசாங்கத்தின் முடிவு தொடர்பாக ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை அடுத்தே, றோகண புஷ்பகுமார விவசாய அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து விலகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், அவர் தனிப்பட்ட காரணங்களால் பதவி விலகியுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக வயம்ப பல்கலைக்கழக விவசாய பீடத்தின் பேராசிரியர் உதித்த ஜயசிங்க விவசாய அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படவுள்ளார் என்றும் அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார்.
இயற்கைப் பசளைகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை இவர் முன்னெடுப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், விவசாய அமைச்சின் செயலாளர் பதவி விலகும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். முன்னாள் இராணுவத் அதிகாரியான மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா, சில மாதங்களுக்கு முன்னர் விவசாய அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.