பிரெஞ்சு கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளன.
பிரெஞ்சு கடற்படையின் உலங்குவானூர்தி தாங்கி கப்பலான எவ்என்எஸ் ரொன்னர் மற்றும் போர்க்கப்பலான, எவ்என்எஸ் சர்கோவ் ஆகிய போர்க்கப்பல்களே சுமார் 750 மாலுமிகளுடன் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளன.
தொற்று அபாயமுள்ள நிலையிலும், இந்தப் போர்க்கப்பல்கள் முழுமையான பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய கொழும்பு பயணம் மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிபுட்டியில் இருந்து மூன்று மாதங்களுக்கு முன்னர் புறப்பட்ட இந்தக் கப்பல்கள் கடலிலேயே தொடர் பயணங்களை மேற்கொண்டுள்ளன என்றும், தொழில்நுட்ப தேவைகளுக்காக இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது, பிரெஞ்சுக் கடற்படையினர் விடுதிகளில் தங்கவும், சிகிரியா, அனுராதபுர, மின்னேரியா, யால மற்றும் உடவளவ ஆகிய இடங்களுக்கு பயணம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மூடப்பட்ட நிலையில் உள்ள தேசிய பூங்காக்கள் பிரெஞ்சு கடற்படையினருக்காக திறந்து விடப்படுவதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரெஞ்சு போர்க்கப்பல்கள் வரும் 11ஆம் திகதி வரை தரித்துச் செல்வதன் மூலம் இலங்கைக்கு 250 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கும் என்றும் அரசாங்கம் கூறியுள்ளது.