கொரோனா தொற்றை அடுத்து மூடப்பட்ட புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையை மீளத் திறப்பதற்கு பிரதேச மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 300இற்கும் அதிகளவானோர் கடந்த மாதம் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பின் 9 கிராம அலுவலர் பிரிவுகள் முற்றுமுழுதாக முடக்கப்பட்டுள்ளதுடன், புதுக்குடியிப்பு ஆடைத்தொழிற்சாலையும் மூடப்பட்டுள்ளது.
இந்த ஆடைத்தொழிற்சாலையை நிபந்தனைகளுடன் மீளத் திறப்பதற்கு, சுகாதாரத் துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதையடுத்து, புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை பணியாளர்கள் இன்று பணிக்கு அழைக்கப்பட்ட நிலையில், அதனை தடுத்து நிறுத்துவதற்காக சென்ற போதே, புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப தவிசாளர் க.ஜெனமேஜெயந் உள்ளிட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அத்துடன், குறித்த பகுதிக்கு சென்று எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பொதுமக்களையும் சிறிலங்கா காவல்துறையினர் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. அதேவேளை, புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை திறக்கப்படுவதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக புதுக்குடியிருப்பு வர்த்தகர் சங்கம் தெரிவித்துள்ளது.