யாழ்.வட்டுக்கோட்டை – தொல்புரம் பகுதியில் பிறந்த குழந்தை அன்றைய தினமே உயிரிழந்த நிலையில் குழந்தையின் பெற்றோரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, மாத்தளை பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் கடந்த ஆறு வருடங்களாக செல்வா வீதி, தொல்புரம் பகுதியில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 22.05.2021 அன்று தாய்க்கு வீட்டிலேயே குழந்தை பிறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் ஏற்பட்ட இரத்தப்போக்கு கட்டுப்படாமையினால் அவர் மூளாய் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவரைப் பார்வையிட்ட வைத்தியர்கள் கர்ப்பமாக இருந்தீர்களா? உங்களுக்கு குழந்தை பிறந்துள்ளதா? என வினவினர். அதற்கு குறித்த பெண் தான் கற்பமாகவும் இல்லை குழந்தை பிறக்கவுமில்லை என முரண்பாடான தகவல்களை வழங்கியுள்ளார்.
அதன் பின் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து தான் குழந்தை பெற்றெடுத்த விடயத்தை அவர் ஒப்புக்கொண்டார் குழந்தையை தூக்கும்போது கை நழுவி விழுந்து குழந்தை இறந்துள்ளதாகவும் குழந்தையின் உடலம் வீட்டில் தான் உள்ளது எனவும் கூறியுள்ளார்.
மருத்துவர்கள் குழந்தையை வைத்தியசாலைக்கு எடுத்து வருமாறு கூற, அப் பெண்ணின் மாமியார் குழந்தையை 2021.05.23 அன்று வைத்தியசாலைக்கு எடுத்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து குழந்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தலை அடி காயங்கள் உள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் நேற்றைய தினம் (2021.05.31) வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் பெண்ணையும் அவரது கணவரையும் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்து விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு ஏற்கனவே மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் தற்போது இந்தக் குழந்தை நான்காவதாக பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.