(கனகராசா சரவணன்)
கொழும்பு – சீதுவ பகுதியிலிருந்து மட்டக்களப்பிலுள்ள மதுபானசாலைகளுக்கு லொறி ஒன்றில் 17 மில்லியன் ரூபா பெறுமதியான 9240 மதுபானப் போத்தல்களை எடுத்துச் சென்ற லொறியை வாழைச்சேனை ரிதிதென்னை பொலிஸ் சோதனைச்சாவடியில் இன்று திங்கட்கிழமை (31) பொலிஸார் மடக்கி பிடித்துள்துடன் இருவரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு பொலநறுவை எல்லை பகுதியான ரிதிதென்னை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் வீதிச் சோதனை சாவடியில் சம்பவதினமான இன்று திங்கட்கிழமை காலையில் பொலிஸார் வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போது மட்டக்களப்பை நோக்கிச் சென்ற லொறியை நிறுத்தி சோதனையிட்டபோது பயணத்தடையை மீறி சீதவயிலுள்ள மதுபான உற்பத்தி நிலையத்தில் இருந்து மட்டக்களப்பிலுள்ள மதுபானசாலைக்கு மதுபானங்களை எடுத்துச் செல்வதை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து லொறியிலுள்ள 17 மில்லியன் ரூபா பெறுமதியான 9240 போத்தல் கொண்ட மதுபானங்களையும் லொறியையும் கைப்பற்றியதுடன் இருவரை கைது செய்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.