நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் தலைமையகம், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் மீண்டும் அறிவித்துள்ளது.
அத்தியாவசிய கடமை அல்லது சேவை என்ற போர்வையில், பெரும்பாலானோர், பயணக் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பயணக் கட்டுப்பாட்டை மீறுவோரை கைது செய்து, நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம்,பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்துள்ளது.
இவ்வாறு பயணக் கட்டுப்பாட்டை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் ஒருவருக்கு அதிகபட்ச தண்டப்பணமாக 10,000 ரூபாவும், 6 மாத கால சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதன்படி, பயணக் கட்டுப்பாட்டை மீறி செயற்படுவோரை கைது செய்வதற்காக, சோதனை சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, 24 மணித்தியாலங்களும் பொலிஸாரை கடமைகளில் ஈடுபடுத்துமாறு பொலிஸ் தலைமையகம், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்தல் பிறப்பித்துள்ளது.