யாழ்.மாநகர மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணணுனுக்கு எதிராக வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரிடத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்.மாநகர சபையில் மேலதிகமாக ட்ரக்டர்களை வாடகைக்கு அமர்த்தும் கேள்வி மனுக்கோரல் (டெண்டர்) செயற்பாட்டில் முறைகேடுகள் மற்றும் ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருக்கலாம் என்ற அடிப்படையில் சில விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டு இந்த முறைப்பாடு எழுத்து மூலமாக செய்யப்பட்டுள்ளது.
யாழ்.மாநகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவராலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்.மாநகர சபையில் குப்பைகளை சேகரிப்பதற்காக பாவனையில் உள்ள ட்ரக்டர்களை(உழவு இயந்திரங்களை) விட மேலதிகமாக ட்ரக்டர்களை வாடகைக்கு அமர்த்துவதற்கான கேள்வி மனுக்கோரல் அண்மையில் விடுக்கப்பட்டிருந்தது.
அதற்கு அமைவாக கிடைக்கப்பெற்ற கேள்வி மனு விண்ணப்பங்களில் கிலோமீற்றர் ஒன்றுக்கு 42ரூபா முதல் 75ரூபாவிற்கு மேல் வரையிலான பெறுமதி குறிக்கப்பட்டிருந்தது.
அதேநேரம் கடந்த ஆண்டில் கிலோமீற்றர் ஒன்றுக்கு 55ரூபா வழங்கப்பட்டதாக கொடுப்பனவுக் கணக்குகளில் காணப்பட்டுள்ளது.
இதனால், இம்முறை கேள்வி மனுக்கோரலில் கிலோமீற்றர் ஒன்றுக்கு 55ரூபாவிற்கு கீழ் பெறுமதி குறித்து விண்ணப்பித்தவர்கள் அனைவரையும் அழைத்து அனைவருக்கும் கிலோமீற்றர் ஒன்றுக்கு 55ரூபா படியே வழங்குவதாக மாநகர சபை மேயர் மணிவண்ணனின் இணக்கத்துடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கடந்த வருடத்திற்கு அமைவான தொகையே இம்முறையும் வழங்குதென்றால் எதற்காக கேள்வி மனுக் கோரப்பட்டது என்று முறைப்பாடைப் பதிவு செய்த கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் எமது செய்திப்பிரிவிடம் கேள்வி எழுப்பினார்.
அதேநேரம், கிலோமீற்றருக்கு 42ரூபா முதல் 54ரூபா வரையில் பெறுமதி குறித்தவர்களுக்கு மேலதிகமாக கிலோமீற்றருக்கான பணத்தினை வழங்கும் வகையில் அனைவருக்கும் கடந்தாண்டு வழங்கிய 55ரூபாவே வழங்கப்படுகின்றது.
இவ்வாறு கேள்வி மனுக்கோரலில் குறைவான பெறுமதி இட்டவர்களுக்கும் மேலதிகமாக பணம் வழங்கப்படுவதானது எந்த அடிப்படையில் என்றும் குறித்த உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேவேளை, இந்த விடயங்கள் தொடர்பில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் விரைவில் உரிய விளக்களைப் பெற்று நடவடிக்கைகளை எடுப்பதற்குரிய பூர்வாங்கப் பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த அமைச்சின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மாநகர சபையில் மாற்றத்தினை ஏற்படுத்துவோம் என்று ஆட்சியில் அமர்ந்த மணிவண்ணன் இவ்வாறு நடந்துகொண்டுள்ளமையை இட்டு பலதரப்பினரும் அதிருப்பதிகளை வெளியிட்டுள்ளதாகவும் யாழ்.மாநகர சபையின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.