தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்குக் கப்பலிலிருந்து கடலில் வீழ்ந்துள்ள கொள்கலன்கள், திரவியங்கள் மற்றும் சிதைவுகள் இலங்கையின் மேற்குக் கடற்கரையில் கரை ஒதுங்கி வருகின்றன.
இன்று (26) இவ்வாறான கொள்கலன்கள், திரவியங்கள் மற்றும் சிதைவுகள் மேற்கு கடற்கரைப் பகுதியான நீர்கொழும்பு மற்றும் அதனை அண்மித்த கடற்கரையில் ஒதுங்கியுள்ளன. ஜா – எல, கெப்பும்கொட, செத்தப்பாடுவ, துன்கல்பிட்டிய கடற்கரைகளில் நேற்றைய தினம் இந்த கப்பல் சிதைவுகள் மற்றும் கொள்கலன்கள் கரை ஒதுங்கின.
இந்நிலையில், தற்போது அமுலில் உள்ள பயணத் தடை உத்தரவையும் மீறி, கரையோர பிரதேச மக்கள், கரை ஒதுங்கிய திரவியங்கள், சிதைவுகளை வீடுகளுக்கு எடுத்துச் செல்வதை அவதானிக்க முடிந்தது.
கரையொதுங்கியுள்ள கொள்கலன்களில், இரசாயன பதார்த்தங்கள் இருந்துள்ள நிலையில், அந்த கொள்கலன்களையோ, அல்லது கடலில் மிதந்துவரும் அக்கப்பலில் இருந்த பதார்த்தங்கள் என சந்தேகத்துக்கு இடமான பொருட்களையோ பொதுமக்கள் தொடுவதிலிருந்து தவிர்ந்திருக்குமாறு சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுரவும் மீனவத் திணைக்களமும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்த பின்னணியிலேயே அதனை பொருட்படுத்தாது பொதுமக்கள் பொருட்களை வீடுகளுக்கு எடுத்து செல்வதை அவதானிக்க முடிந்தது.
கரை ஒதுங்கிய சிதைவுகள், பிளாஸ்டிக்கள், சில இரசாயன பொருட்கள் அடங்கியனவாக இருக்கலாம் என நம்பப்படும் மூடைகள், சொக்லட் வகைகள், பக்கெற்றுகளில் அடைக்கப்பட்ட உணவு வகைகள் என பலவற்றை பொதுமக்கள் எடுத்துச் சென்றனர். சிலர் குறித்த திரவியங்களை எடுத்து செல்ல தள்ளு வண்டியை பயன்படுத்தியமையையும் அவதானிக்க முடிந்தது.
இவ்வாறான நிலையில், பொது அறிவித்தலை மீறி, இவ்வாறான அபாயகரமான செயர்பாடுகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இதற்கு தேவையான ஆலோனைகளை உரிய பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கவுள்ளதாக அவர் கூறினார்.