யாழ்.பருத்தித்துறை – ஓடக்கரை வீதியில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த வீதியின் ஒரு பகுதி முடக்கப்பட்டிருக்கின்றது.
இந்தப் பகுதி நேற்று முதல் பொதுப் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளது. ஓடக்கரை வீதியின் முடக்கப்பட்ட பகுதியில் உள்ள மூன்று வீடுகளில் வசித்து வரும் 11 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கான தொற்று மூலம் எது என்பதையும் அடையாளம் காணமுடியாதுள்ளதாகவும் பருத்தித்துறை சுகாதாரப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தொற்றாளர்களுடன் தொடர்புபட்டவர்களை இனம் கண்டு அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை, இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் அண்மையில் மரண நிகழ்வு இடம்பெற்றுள்ளதாகவும்,
அங்கு பலர் வந்து சென்றிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.