பொதுஜனபெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஷில் ராஜபக்ஷ கடந்த புதன்கிழமை(12/05/2021) திடீரென அமெரிக்காவிற்கு பறந்துள்ளார்.
கடந்த ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் அமெரிக்கா செல்ல திட்டமிருந்த பஷில் ராஜபக்ஷ நாட்டு நெருக்கடிகளால் அப்பயணங்களைப் பிற்போட்டிந்த நிலையில் தற்போது அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கின்றார்.
இவ்வாறு பஷிலின் அமெரிக்க விஜயத்திற்கு மூன்று விதமான காரணங்களை அடுக்குபவர்கள் வேறு யாரும் அல்ல. பஷிலின் இரத்த உரித்துடைய ராஜபக்ஷ குடும்பத்தினரும், அவரின் அரசியல் குடும்பமான பொதுஜன பெரமுனவும் தான்.
ராஜபக்ஷ குடும்பத்தின் மூத்தவரான சமல் ராஜபக்ஷ, ‘மனிதனுக்கு நோய் நொடி வரதா, அதற்கு சிகிச்சைகள் எடுக்க வேண்டாமா, அதற்காகவே அவர் (பஷில்) அமெரிக்கா சென்றுள்ளார்’ என்று கூறுகின்றார்.
அதேவேளை, நாமல் ராஜபக்ஷவோ, ‘தனது சிறிய தந்தைக்கு அமெரிக்கா சென்று சிகிச்சை பெறும் அளவிற்கு நோய் நொடிகள் எதுவும் இல்லை என்று கூறிய அவர் ஓய்வுக்கான சென்றிருக்கின்றார்’ என்று குறிப்பிடுகின்றார்.
பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசமும், டிலான் பெரேராகவும், ‘அவருக்கு பேரக்குழந்தை பிறந்திருக்கின்றது அதனைப் பார்ப்பதற்கு சென்றுள்ளார். யாருக்கும் வரும் ஆசை தானே. தனது பேரக்குழந்தையை கொஞ்சுவதற்கு பஷிலுக்கு விருப்பம் இருக்காதா என்ன?’ என்று கேள்விகளையும் எழுப்புகின்றனர்.
பொதுஜனபெரமுனவின் தேசிய அமைப்பாளர் என்ற பதவிநிலைக்கு அப்பால் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான சிறப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர், கொரோனா தடுப்பு செயற்பாட்டுக்காக ஜனாதிபதியின் சிறப்பு பொறுப்புக்களைப் பெற்றவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பிலான பொறுப்புக்களைக் கொண்டிருப்பவர் பஷில்.
அவ்வாறிருக்க, தற்போது,பொதுஜனபெரமுனவின் பங்காளிகளான விமல் அன் கோ தரப்பு முறுகல் நிலையில் தொடர்ந்தும் இருந்து வருகின்றது. இத்தரப்பு எந்தநேரத்தில் என்ன செய்யும் என்று கூறமுடியாத நிலைமையொன்று நீடித்துக்கொண்டிருக்கின்றது.
மறுபக்கத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் சுகாதரத்துறையில் மேலும் நெருக்கடிகள் மேலெழுந்துள்ளன. ஏற்கனவே ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடிகள் மேலும் வலுத்துள்ளன.
இத்தகையதொரு இக்கட்டான நிலைமையில் பஷில் தனக்கு நெருங்கியவர்களிடத்தில் கூட எதனையும் கூறாது அமெரிக்கா பறந்துள்ளமையானது ‘மீண்டும் 2015 ஜனாதிபதி தேர்தலை’ நினைவு படுத்துவதாக ஆளும் தரப்பின் சில முக்கிய உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போதைய நிலையில், பஷில் அமெரிக்கா சென்றமைக்காக கூறப்படும் காரணங்களில் ஓய்வெடுப்பதற்காக சென்றார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மறுபக்கத்தில் கடந்த ஒன்பதாம் திகதி ஜனாதிபதி கோட்டாபயவும் ‘பேரனார்’ ஆகியுள்ளார். அவர் அமெரிக்காவுக்கு விரையவில்லை. அப்படியிருக்க அந்தக் காரணத்திற்காக பஷில் சென்றிருப்பார் என்றும் கூறுவதற்கு இல்லை.
சுகவீனமாக இருக்கலாம் என்று கொண்டாலும் அமெரிக்கா செல்லுமளவிற்கு எவ்விதமான சுகவீனமும் இல்லையென்று நாமலே பகிரங்கமாக கூறுகின்றார்.
அப்படியென்றால் பஷில் ஏன் அமெரிக்கா சென்றார். ராஜபக்ஷ தரப்பிற்குள் ஏற்பட்டிருக்கின்ற குத்துவெட்டுக்களால் அவர், ‘இனிமேல்’ முடியாது என்ற மனோநிலையில் வெளியேறி விட்டாரா என்ன?
ஜனாதிபதிக் கனவுடன் வலம் வரும்அவருக்கு அவ்வாறான ‘அரசியல் சலிப்புத்தான்’ ஏற்படுமா என்ன?
பொதுமக்களைப் பொறுத்தவரையில் பஷின் அமெரிக்க பயணம் ஒரு ‘சிதம்பர ரகசியம்’