(குகதர்சன்)
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கல்மடு கிராம அதிகாரி பிரிவிலுள்ள மருதநகர் கிராமம் நேற்று புதன்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தெரிவித்தார்.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மருதநகர் கிராமம் தனிமைப்படுத்தப்படுதல் தொடர்பில் வாழைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அவசர கலந்துரையாடல் இடம்பெற்றது.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ், வாழைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், உதவி பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன், செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.கங்காதரன், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ், கல்மடு கிராம அதிகாரி கிராம அதிகாரி ஜெ.கிருசாந்த், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, இராணுவ உயர் அதிகாரி, செயலக உத்தியோகத்தர்கள், கல்குடா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கல்மடு கிராம அதிகாரி பிரிவிலுள்ள மருதநகர் கிராமத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி மரண வீட்டில் கலந்து கொண்ட நாற்பத்தியொரு நபர்களுக்கு எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் இருபத்தி நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.
இதன் பிரகாரம் மரண வீட்டிற்கு பலர் சென்று வந்த நிலையில் மருதநகர் கிராமத்திலுள்ள மக்களின் பாதுகாப்பு கருதி மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் அந்தக் கிராமத்தில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் கிராமத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டதுடன், பொலிஸ் மற்றும் பிரதேச சபையினரால் மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல் வழங்குமாறும் பணிப்புரை வழங்கப்பட்டது.