Sunday, March 26, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

முள்ளிவாய்க்கால் 12ஆவது ஆண்டு; மே 18 பிரகடனம்

News Team by News Team
May 18, 2021
in இலங்கை, முக்கியச்செய்திகள்
Reading Time: 2 mins read
0 0
0
முள்ளிவாய்க்கால் 12ஆவது ஆண்டு; மே 18 பிரகடனம்
0
SHARES
138
VIEWS
FacebookWhatsappTwitterEmail

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12ஆவது ஆண்டு ‘மே-18-2021 பிரகடனம்’ வெளியிடப்பட்டுள்ளது. அப்பிரகடனம் முழுமையாக வருமாறு,

 

மே18 பிரகடனம் – 2021

அன்பான ஈழத்தமிழ் உறவுகளே!

முள்ளிவாய்க்கால் எமதினத்தின் இதயம். ஒவ்வொரு ஆண்டும் சிங்கள-பௌத்த அரசு தனது அரச இயந்திரத்தைப் பயன்படுத்தி நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுத்து வருவதோடல்லாமல் நினைவேந்தலை நிறுவனமயப்படுத்தவிடக்கூடாது என்பதில் கவனமாய் இருக்கின்றது. அதனால்தான் நினைவுத்திடலை பெயரிட எடுத்த முயற்சிகளைத் தனது இராணுவக் கரம்கொண்டு நசுக்கியிருக்கின்றது. இதனைவிடவும் நாங்கள் இறந்தவர்களை நினைந்து சுடரேற்றும் புனித இடத்தை மாசுபடுத்தி அழித்திருக்கின்றது. இவ்வாறான இராணுவ அடாவடித்தனங்கள் எமதினத்தின் அடக்குமுறைக்கெதிரான விடுதலை வேட்கையை மேலும் உறுதிப்படுத்துமே தவிர நலிவடையச் செய்யப்போவதில்லை.

முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழர்களை ‘ஈழத்தமிழ்த் தன்மையில்’ ஒருங்கிணைக்கும் தேசிய விடுதலையின் மையப்புள்ளியாகும். ஈழத்தமிழர்களுக்கென்று நினைவுகூரல் பண்பாட்டுப் பாரம்பரியம் உண்டு. எங்களோடு வாழ்ந்து இறந்து போனவர்களை இன்றும் எம் வீடுகளிலும், பொது பொதுவெளிகளில் நினைவுகூருகின்றோம். இறந்தவர்களின் படங்களுக்கு மாலையிட்டு, விளக்கேற்றி அவர்களுடைய சுவாச இருப்பை தக்க வைத்துக் கொள்ளுகின்றோம். அவர்கள் இறந்த காலத்திற்குரியவர்களாக இல்லாமல் எம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்களாகக் கருதும் நம்பிக்கையில்தான் ஈழத்தமிழர்களது நினைவுகூரல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

அவர்களுடைய கனவுகள் எப்போதும் எம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்தக் கனவுகளைச் சுமந்துதான் அடுத்த தலைமுறை உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எமது சொந்தங்கள் ஒவ்வொருவரும் எம்மினத்தின் மூச்சாக வாழ்ந்தவர்கள். சிங்கள–பௌத்த அடக்குமுறைக்கெதிராக ஈழத் தமிழினம் என்றோ ஒருநாள் சுதந்திரத்துடன் வாழும் என்ற கனவுடன் மூச்சடங்கிப் போனவர்கள். முள்ளிவாய்க்கால் ஒரு தோல்வியின் புள்ளியல்ல, சிங்கள–பௌத்த அரசு முள்ளிவாய்க்காலை, தமிழர் விடுதலைப் போராட்டத்தின் ஒரு தோல்வியின் முடிவாகவே கட்டமைக்க முயல்கின்றது. 

முள்ளிவாய்க்கால் சிங்கள–பௌத்த அடக்குமுறைக்கெதிராக தொடர்ந்தும் எழவேண்டிய வரலாற்றுக் கடமையை, பட்டறிவினூடு உணர்த்திய வரலாற்றுத் திருப்புமுனையாகும். அடக்குமுறைக்கெதிரான போராட்டங்கள் தோற்றுப் போனதற்கான உண்மைகள் உலகில் எங்கும் இல்லை. வரலாற்றுப்பக்கங்களில் விடுதலைப் போராட்ட அணுகுமுறைகள் பின்னடைவுகளைச் சந்தித்திருக்கின்றன. விடுதலைப் போராட்டத்தை வெற்றி, தோல்வி என்ற இருமை முறையியலுக்குள் வைத்து ஆராய முற்படுவது வரலாற்று அபத்தம். அதைத்தான் சிங்கள–பௌத்த அரசு செய்து வருகின்றது.

சிங்கள–பௌத்த அரசு முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையை ஒருபோதும் ஏற்று அங்கீகரிக்கப் போவதில்லை. துருக்கிய அரசு ஆர்மேனியப் படுகொலையை 106 ஆண்டுகளாகியும் ஏற்றுக் கொள்ளவில்லை, தொடர்ந்தும் ஆர்மேனியர்களின் இனப்படுகொலைக் கோரிக்கையை மறுத்து, நிராகரித்து வந்துள்ளது. தமிழ் இனப்படுகொலையை மறுத்து, நிராகரித்து வருகின்ற சிங்கள–பௌத்த அரசு வரலாற்றில் ஒருபோதும் நினைவுகூரலுக்கான நினைவுத்திற வெளியை ஈழத்தமிழர்களுக்கு கட்டமைக்கப் போவதில்லை.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வரலாற்றியல் சொல்லாடல் சிங்கள – பௌத்த அரசு ஊக்குவிக்கின்ற வெற்றிச் சொல்லாடல்களுக்கு எதிர்வினையாய் உள்ளது. ஈழத்தமிழர்கள் தடைகளுக்கு மத்தியில்தான் நினைவுகூரலை ஒழுங்கமைக்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்திற்குள் வலிந்து தள்ளப்பட்டுள்ளனர். நினைவுகூருதலை அடக்குமுறைக்கெதிரான ஆயுதமாக மாற்றவேண்டிய சூழலை சிங்கள-பௌத்த அரசு ஈழத் தமிழர்கள்மேல் திணித்து வருகின்றது. பின் முள்ளிவாய்க்கால் வரலாற்றுத் தளத்தை வைத்துக்கொண்டு ஒற்றையாட்சியை மையப்படுத்தி, அதனை வலுப்படுத்தி, தமிழ்த் தேசிய நீக்க அரசியலை சிங்கள–பௌத்த அரசு முன்னெடுத்து வருவதை அனைவரும் அறிவர்.

வடக்கு–கிழக்கில் இராணுவ மயமாக்கலை நீட்சிப்படுத்தி, பயங்காரவாதம் என்ற போர்வையில் வடக்கு–கிழக்கு மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கி, அச்ச மனநிலைக்கூடாக மக்களை ஆள, கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முயற்சிக்கின்றது. அதையே மக்கள் கிளர்ச்சிக்கு எதிரான உத்தியாகவும், ஆயுதமாகவும் பயன்படுத்துகின்றது. பின் முள்ளிவாய்க்கால் வரலாற்றில் இரத்தமற்ற ஆக்கிரமிப்புப் போரை சிங்கள–பௌத்த அரசு வடக்கு–கிழக்கில் கட்டவிழ்த்து விட்டுள்ளது. 

அப்போரின் பரிமாணங்கள்; நில அபகரிப்பாகவும், சிங்கள–பௌத்த காலணித்துவ மயமாக்காலாகவும், ஈழத்தமிழ் குடிசனப் பரம்பலை மாற்றியமைத்து பிரதிநிதித்துவத்தை சிக்கலுக்குட்படுத்துவதாகவும், சிறிலங்காவின் பெரும்பான்மை ஒற்றைப் பண்பாட்டை அங்கீகரிப்பதாகவும், சிங்கள–பௌத்த ஏகாதிபத்தியத்தை தக்க வைத்துக்கொண்டு மாகவம்சத்தில் வாக்களிக்கப்பட்ட தேசத்தை அடையும் இலக்கை கொண்டதாகவும் அமைந்திருக்கின்றன. வடக்கு–கிழக்கில் தமிழர் நிலம் தொடர்ந்தும் சூறையாடப்படுகின்றது. 

வன இலாகா, தொல்லியல் திணைக்களம், வன ஐPவராசிகள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை என சிங்கள–பௌத்த அரச இயந்திரத்தின் பல்வேறு திணைக்களங்கள் நில அபகரிப்புச் செயற்திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தமிழர் பூர்விகத்தை நிறுவக்கூடிய மிகத்தொண்மையா ஆதார எச்சங்கள் முதன்மையாக இருந்த போதிலும் அவற்றை இருட்டடிப்புச் செய்து சிங்கள–பௌத்த தொல்லியல் எச்சங்களை மட்டுமே கண்டெடுக்கின்ற தொல்லியல் திணைக்களம் சிறிலங்காவின் வரலாற்றியலை சிங்கள–பௌத்தத்திற்கு மட்டுமானதாக கட்டமைக்க முயலுகின்றது. 

கிழக்கில் அபகரிக்கப்படும் தமிழர் நிலங்களில் சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டு குடிசனப் பரம்பலை மாற்றியமைப்பதில் சிங்கள–பௌத்த அரசு கங்கணம் கட்டி நிற்கின்றது. பௌத்த விகாரைகளுக்காக காணிகளை ஒதுக்குவதன் மூலம் சிங்கள பௌத்தத்தை வடக்கு-கிழக்கு எங்கும் அமைத்து வடக்கு-கிழக்கில் தமிழர்களின் பெரும்பாண்மை அடையாளங்களைச் சிதைத்து வருகின்றது. அபிவிருத்தி என்ற போர்வையில் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை மத்திய அரசின் கீழ் காணி நிர்வாகத்தை கொண்டு வருவதுடன் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்களை உருவாக்குகின்றது. ஒட்டுமொத்தத்தில் வடக்கு–கிழக்கில் சிங்கள-பௌத்த அரசு, உளவியல் போரையும், இரத்தமற்ற ஆக்கிரமிப்புப் போரையும் கட்டவிழ்த்து கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை முன்னெடுத்து வருகின்றது.

 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு ஈழத்தமிழர்கள் சர்வதேச விசாரணை மூலமே நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும், பட்டறிவிலும் தொடர்ந்து சர்வதேச விசாரணைக்கான பரிந்துரைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிங்கள–பௌத்த அரசு உள்ளக விசாரணையை மட்டுமே வலியுறுத்தி வந்துள்ளது. ஈழத் தமிழர்களுடைய வரலாற்றுப் பட்டறிவின் அடிப்படையில் உள்ளக விசாரணை ஈழத் தமிழர்களுக்கு ஒருபோதும் நீதியைப் பெற்றுத்தரப் போவதில்லை என்பது திண்ணம்.

 சிங்கள–பௌத்த அரசு இனப்படுகொலைக் குற்றவாளிகளை கதாநாயகர்களாக முன்னிறுத்தி தண்டனை விலக்கீட்டு உரிமைக்கூடாக அவர்களைப் பாதுகாத்து வருகின்றது. இனப் படுகொலையாளிகளுக்கு பதவி உயர்வுகளை வழங்கியது மட்டுமல்ல அவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்ற உறுதிமொழியையும் வழங்கியுள்ளது. படைக்கட்டுமானத்தை ஒருபோதும் சிங்கள–பௌத்த பேரிணவாத குடிமை ஒருபோதும் குற்றவாளிகளாக இனங்காணப் போவதில்லை. இன்நிலையில் சர்வதேசச் சமூகம் கலப்புப் பொறிமுறையை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருவது பாதிக்கப்பட்வர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை கொடுப்பது மட்டுமல்லாமல் வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளவில்லையோ என எண்ணத் தோன்றுகின்றது.

சர்வதேச சமூகமும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் இனப் படுகொலையாளிகளாக தனிநபர்களை அடையாளம்காண முயற்சித்து, அவர்களே பாரிய மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பானவர்களாக கட்டமைக்க முயற்சிப்பது சிங்கள–பௌத்த ஒட்டுமொத்த அரசை, அதன் குற்றவாளித் தன்மையிலிருந்து விடுவிப்பதாகும். ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கு சிங்கள–பௌத்த அரசு கூட்டாக பொறுப்புக்கூற வேண்டும். சிறிலங்காவில் இயங்கு நிலையில் உள்ள ஒற்றையாட்சி சனநாயகத் தன்மை, பெரும்பான்மையினருக்கு சிறப்புரிமை வழங்கி ஏனையவர்களை ‘மற்றமைகளாகக்’ கட்டமைத்து இனப்படுகொலைக்கு இட்டுச் செல்லுகின்றது. 

கடந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும் ஈழத் தமிழர்களுக்கெதிராகச் செய்யப்பட்ட – செய்யப்படும் இனப்படுகொலை, எதிர்காலத்தில் எந்தச் சிறுபான்மையினத்திற்கும் எதிராகச் செய்யப்படலாம் என்ற அச்சம் எழுவது நியாயமானது. சிறிலங்கா ஒற்றையாட்சி சனநாயகத் தன்மையின் உள்ளீடு இனப்படுகொலையை கட்டமைக்கின்றது. சிறிலங்காவின் பல்தேசியத் தன்மை இனங்காணப்பட்டு அங்கீகரிக்கப்படாத வரைக்கும் மேற்கூறப்பட்ட தன்மை மாறப் போவதில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சிறிலங்காவை வெறுமனே நிகழ்ச்சித் திட்டத்திற்காக வைத்து தீர்மானங்களை நிறைவேற்றுவதன் மூலம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அருகிப் போகின்றது. சிறிலங்காவை ஐ. நா. பொதுப் பேரவைக்கு பாரப்படுத்தி சர்வதேச குற்றியல் நீதிமன்றின் ஊடாக மட்டும் நீதியைப் பெற முடியும் என்ற ஈழத்தமிழர்களின் கோரிக்கைக்கு சர்வதேச சமூகம் மதிப்பளிக்க வேண்டும்.

 சர்வதேச சமூகம் தங்களுடைய புவிசார் அரசியல் நலன்களுக்காக மட்டும் செயற்படுவதைத் தவிர்த்து அடக்குமுறைக்குட்படும் மக்களின் சார்பாக செயற்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்படுகின்றது. சர்வதேச சமூகம் ஆர்மேனியப் படுகொலையை, இனப்படுகொலைiயாக இனங்கண்டு அங்கீகரிப்பது நம்பிக்கையைத் தருகின்ற போதிலும் 106 வருடங்கள் என்பது மிக நீண்ட காலம் என்பது மட்டுமல்ல பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய வாழ்நாளில் நீதியைப் பெற்றுக் கொள்ளாது போவது மிகுந்த வேதனையையும் ஏமாற்றத்தையும் அளிக்கின்றது.

நினைவுகூரல் என்பது அடிப்படை மனித உரிமை. அடிப்படை மனித உரிமைச் சாசனத்தின் வரலாற்றுப் பின்புலம் இனப்படுகொலைகளின், பாரிய மனித உரிமை மீறல்களின் அடிப்படையைக் கொண்டிருக்கின்றது. மனித உரிமைச் சாசனத்தில் நினைவுகூரலை, ஓர் உரிமையென வெளிப்படையாகக் கூறாவிட்டாலும் அந்த உரிமை எல்லாவற்றிலும் வியாபித்திருக்கின்றது. நினைவுகூரல், உரிமைக் கோரிக்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. 

பின் முள்ளிவாய்க்கால் தமிழர் தேச கட்டுமானத்தில், முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவுத்திறம் மிகக் காத்திரமான பங்களிப்பு செய்கின்றது. இன்நினைவுத்திறம் ஈழத்தமிழர்களை பின் முள்ளிவாய்க்கால் அரசியல் வரலாற்றுத் தளத்தில் வெறும் அடக்குமுறைக்குட்படுவோராக மட்டும் கட்டமைக்காமல், சிறிலங்கா அரசின் இனப்படுகொலை உள்நோக்கத்தை வெளிப்படுத்தி, கூட்டாக நீதிவேண்டிய அணிதிரட்டலுக்கு வினைத்திறனோடு அழைப்பு விடுக்கின்றது. தமிழினப் படுகொலை நினைவுத்திறம் சிங்கள–பௌத்த அரசின் பொய்முகத்தை கிழித்து போடுகின்றது. 

புள்ளிவிபர உண்மைகளை வெளியுலகிற்கு தெரியப்படுத்துவதன் மூலம் சிங்கள–பௌத்த அரசின் கோர முகத்தை வெளிக் கொணருகின்றது. முள்ளிவாய்க்கால் சிறிலங்காவின் இனப் படுகொலைக்கெதிரான சொல்லாடலை கேள்விக்குட்படுத்தி சிக்கலுக்குட்படுத்துகின்றது. நினைவுத்திறம் பலம் வாய்ந்தது. இதுவும், நீதி வேண்டிய பயணமுமே பின் முள்ளிவாய்க்கால் தளத்தில் தமிழர்கள் கையிலெடுக்கப் போகும் ஆயுதங்கள். சிங்கள-பௌத்த அரசின் இனப்படுகொலையின் அதியுச்சமாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை விளங்குகின்றது. எமது சொந்தங்களையும் அவர்களது கனவுகளையும் நினைவுகூராவிடில் வரலாறு எம்மை ஒருபோதும் மன்னிக்காது. இனப்படுகொலைக்கான நீதி வேண்டிய பேரணியில் பிளவுகளைக் கடந்து ஒன்றித்து பயணிக்க அழைப்பு விடுக்கின்றது.

 ஈழத்தமிழர் விடுதலை, தமிழினத்தின் சமபலக் கட்டமைப்பில்தான் தங்கியுள்ளது. சமபலக் கட்டமைப்பு, சமூக கட்டமைப்புக்களைப் பலப்படுத்தி தன்னிறைவை நோக்கிய நகர்வில், உள்ளக முரண்பாடுகளை நிவர்த்தி செய்துகொண்டு மக்கள் சக்தியை பேரியக்கமாக கட்டியெழுப்புவதில்தான் ஈழத்தமிழர்களின் அடுத்தகட்ட நகர்வு தங்கியுள்ளது. சர்வதேச சமூகம் ஈழத்தமிழர்களின் நலன்கருதி மட்டும் செயற்படுமா என்பது சந்தேகத்திற்குரியது. ஆனால் உலக, பிராந்திய ஒழுங்குகளைக் கருத்தில் கொண்டு, புவிசார் அரசியல் சாணக்கிய உத்திகளை ஈழத்தமிழர் பயன்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதை மறுக்க முடியாது. ஏகாதிபத்திய போட்டி, அரசியல் புதிய ஒழுங்காக அமைகின்றபோது, வடக்கு-கிழக்கின் பிராந்திய அமைவிடம் முக்கியத்துவம் பெறுகின்றது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, ஈழத்தமிழ்த்தன்மையில் ஒன்றுபட்டு பயணிப்பது வரலாற்றுக் கட்டாயமாகும்.

பின்வரும் கோரிக்கைகளை முள்ளிவாய்க்கால் பிரகடனம் முன்வைக்கின்றது

1. நினைவுகூரல் என்பது அடிப்படை உரிமை சார்ந்தது மட்டுமல்ல ஈழத்தமிழர்களின் பண்பாட்டு உரிமையும்கூட. ஆகவே சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்களின் நினைவுகூரல் உரிமையை ஒருபோதும் தடுக்க முடியாது,

2. தமிழ் இனப்படுகொலைக்கு நீதிவேண்டி, இனப்படுகொலைக் குற்றவாளிகளை மட்டுமல்ல சிங்கள–பௌத்த அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக பாரப்படுத்த வேண்டும்.

3. ஐ.நா. மனித உரிமைப் பேரவையிலிருந்து, சிறிலங்காவை ஐ. நா. பொதுச் சபைக்குப் பாரப்படுத்தி தமிழ் இனப்படுகொலையை விசாரிக்க சர்வதேச பொறிமுறை ஒன்றை அமைக்கும்படி கோருகின்றோம்.

4. தமிழ் இனப்படுகொலையை அங்கீகரித்து அதன் மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்.

5. வடக்கு–கிழக்கில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை தடுத்து நிறுத்தவேண்டும்.

6. சிறிலங்காவின் பல்தேசியத் தன்மையை உறுதிப்படுத்தி தமிழர்கள், தேசத்திற்கு உரித்துடையவர்கள் என்பதோடு தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும், சுய நிர்ணய உரிமையின் அடிப்படையிலும் தமிழர்கள் சுயாட்சிக்கு உரித்துடையவர்கள் என்பதைத் தெரிவிக்கின்றோம்.

7. ஈழத்தமிழர்கள் அனைவரும், ‘ஈழத்தமிழ்த் தன்மையில்’ ஒன்றுபட்டு தமிழின விடுதலைக்காக உழைக்க முன்வருவோம்.

நன்றி.
வடக்கு – கிழக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுகட்டமைப்பு, 

Tags: 12ஆவது ஆண்டுபிரகடனம்முள்ளிவாய்க்கால்
News Team

News Team

Recent Posts

  • நாட்டில் இரண்டு பகுதிகளில் நிலநடுக்கம்
  • (no title)
  • தேர்தல் பற்றி மஹிந்த தேசப்பிரியவின் நம்பிக்கை
  • உள்ளம் பொற்கிழி பரிசுப் போட்டிகள்; 1.2 மில்லியன் பரிசுகள்
  • தேர்தலை ஒத்தி வைக்கும் பிரதான சூத்திரதாரி ஜனாதிபதி ரணில்தான்; யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist