சோகங்களே சொத்தாகிப் போனாலும், சோரம் போகா இனமாக சேர்ந்தெழுவோம் என்று மாமனிதர் ரவிராஜின் பாரியார் சசிகலா ரவிராஜ் அறைகூவல் விடுத்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
முள்ளிவாய்க்காலில் உறவுகளின் உயிர்களை அள்ளிக் கொடுத்த அவலம் நிகழ்ந்து மற்றொரு ஆண்டு, உருண்டோடி விட்ட போதிலும் மாறாத சோகம் திரண்டெழுந்து எம் மனதைக் கலங்க வைக்கிறது.
அச்சத்தின் உச்சத்தில் நின்றவாறு எமது உறவுகள் மரணத்தை எதிர்கொண்டு தழுவிய குரூரம் மனது மறக்கக் கூடியதா? குடும்பத் தலைவனை இழந்த சோகத்தால், குமுறும் மனதோடு குடும்பத்தின் தலைமைப் பொறுப்பை பொறுமையோடும் பொறுப்புணர்வோடும் ஏற்று வாழும் மகளிர் எத்தனை பேர், எம் மத்தியில்?
பாதிக்கப்பட்டவர்களை ஆற்றுப்படுத்தி, எம் நேசக்கரங்களை உதவும் கரங்களாக அவர்களை நோக்கி நீட்டுவதே முள்ளிவாய்க்காலில் மறைந்த எம் உறவுகளுக்கு நாம் செய்யும் உண்மையான நினைவேந்தலாகும்.
மரணத்தைத் தழுவியவர்கள் ஆத்மாக்களோ, உடல்களை முற்றாக உதறிவிட்டு இறைவனடியில் ஓய்ந்திருக்க, மரண தேசத்தின் எல்லைக் கோட்டை தொட்டுத் திரும்பியவர்கள், தம் அங்கங்களைப் பகுதியாகவும் முழுமையாகவும் இழந்தவர்களாய் அன்றாட ஜீவனோபாயத்திற்காக மாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
திரைப்படங்களில் கூட காட்டக்கூடாதென்று தணிக்கை செய்யப்படும் காட்சிகளை விடப் பன்மடங்கு கோரமான காட்சிகளை கண்ணுற்றதால் கலக்கமுற்று மனதால் மரணித்து, நடைப்பிணங்களாக நடமாடும் நம்மவர்கள் பலர்.
சோகங்களே சொத்தாகிப் போனாலும், சோரம் போகாத இனமாக சேர்ந்தெழுவோம். மனிதர்கள் மரணித்தாலும் மனிதம் மரணிக்காத தேசமிதுவென்று மற்றவர் வியக்கும்படி மாற்றங்களை உருவாக்குவோம்.