பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலின் தாக்குதலினால் 42 பேர் உயிரிழந்துள்ளனர் என பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை இன்று திங்கட்கிழமையும் இஸ்ரேல் கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
காஸாவிலிருந்து ஹமாஸ் இயக்கம் நடத்தும் ரொக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் போர் விமானங்கள் மற்றும் ரொக்கெட்டுகள் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காஸாவில் 42 பேர் உயிரிழந்தனர் எனவும் அவர்களில் 10 சிறார்கள், 16 பெண்களும் அடங்குவதாகவும் காஸா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை முதல் இஸ்ரிலன் தாக்குதல்களினால் இதுவரை 197 பலஸ்தீனர்கள் இறந்துள்ளனர். இவர்களில் 58 சிறார்கள், 33 பெண்களும் அடங்கியுள்ளனர். அத்துடன் 1230 பேர் காயமடைந்துள்ளனர் என ஹமாஸ் கட்டுப்பாட்டிலுள்ள சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஹமாஸின் ரொக்கெட் தாக்குதல்களினால் இஸ்ரேலில் 2 சிறார்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 282 இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கள் முதல் சுமார் 3000 ரொக்கெட்டுகளை இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் இயக்கம் ஏவியுள்ளது இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இன்று காலை இஸ்ரேலிய போர் விமானங்கள் சுமார் 80 தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கடுமையான தாக்குதல்கள் இதற்குமுன் நடத்தப்பட்டதில்லை என மேற்கு காஸா பகுதியில் வசிக்கும் மெத் அபோத் ரபோ தெரிவித்துள்ளார். மானி காஸாத் என்பவர் றுகையில், நாம் பொதுமக்கள், போராளிகள் அல்லர் என்பதை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு உணர வேண்டும் எனக் கூறியுள்ளார்.