வீட்டிலிருந்து வெளியே செல்ல தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்க நடைமுறை இன்று முதல் அமுலுக்கு வருகின்றது எனப் பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
இன்று தொடக்கம் எதிர்வரும் 31ஆம் திகதி வரை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேரப் பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும். இந்த நேரங்களைத் தவிர்த்து ஏனைய நேரங்களில் (அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை) தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையிலேயே பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியேற முடியும்.
அத்தியாவசிய சேவையை முன்னெடுப்பவர்கள், தொழிலுக்குச் செல்லும் அரச மற்றும் தனியார் துறையினருக்கு குறித்த காலப்பகுதியில் இந்த நடைமுறை பொருந்தாது. பொருள்கள் கொள்வனவு உட்பட இதர விடயங்களுக்காக வீட்டிலிருந்து வெளியே வருபவர்களுக்கே இந்த நடைமுறை பொருந்தும்.
தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் ஒன்றை எண்ணாக இருந்தால் (1,3,5,7,9) ஒன்றை இலக்க நாளில் வெளியே செல்லாம். உதாரணமாக இன்று செல்லாம். இரட்டை இலக்க நாளாக இருந்தால் (2,4,6,8) இரட்டை இலக்க நாளிலே வெளியே செல்லாம். உதாரணமாக நாளை (18) வெளியில் செல்ல முடியும். பூஜ்ஜியம் (0) இலக்கமும் இரட்டை எண்ணாகவே கருதப்படும்.
இதேவேளை, எதிர்வரும் 31ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையும் அமுலில் இருக்கும்” என்றார்.