சீனாவின் ஸுரோங் (Zhurong) விண்கலம் செவ்வாய் கிரகத்தில் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியதாக சீனா அறிவித்துள்ளது. இதன் மூலம், அமெரிக்காவுக்கு அடுத்ததாக செவ்வாய் கிரகத்தில் விண்கலம் ஒன்றை தரையிறக்கிய இரண்டாவது நாடாகியுள்ளது சீனா.
ஸுரோங் விண்கலம் 6 சக்கரங்களைக் கொண்டதாகும். ஸுரோங் என்பதற்கு சீன புராணங்களின்படி தீக் கடவுளை குறிப்பதாகும். செவ்வாய், கிரகத்தில் ஸுரோங் விண்கலம் இருப்பதை சித்தரிக்கும் ஓவியம்
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா அனுப்பிய தியான்வென்-1 விண்கலமானது, கடந்த பெப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. 6 சக்கரங்களைக் கொண்ட ‘ரோவர்’ கருவியுடன் அனுப்பப்பட்ட இந்த விண்கலத்தின் மொத்த எடை 240 கிலோ ஆகும்.
நேற்றுக்காலை தியான்வென்-1 Tianwen ஓடத்திலிருந்து ஸுரோங் விண்கலம் பரசூட் மூலம் தரையிறக்கப்பட்டது. பெய்ஜிங் நேரப்படி சனிக்கிழமை காலை 7.18 மணிக்கு இவ்விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியதாக சீனா அறிவித்துள்ளது.
இவ்விண்கலம் வெற்றிரகமாக தரையிறக்கப்பட்டதையடுத்து சீன விஞ்ஞானிகளை சீன ஜனாதிபதி ஹீ ஜின்பிங் பாராட்டியுள்ளார். செவ்வாய் கிரகம் தற்போது பூமியிலிருந்து 320 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது. அங்கிருந்து அனுப்பப்படும் வானொலி தகவல்கள் பூமியை வந்தடைவதற்கு 18 நிமிடங்கள் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய் கிரகத்தில் ஸுரோங் விண்கலம் தரையிறக்கப்படுவதை சித்தரிக்கும் அனிமேஷன் வீடியோ: