வேந்தர் பதவி மட்டுமல்ல இன்னும் பல நியமனங்கள் வழங்கப்பட்டாலும் எனது குரலை யாரும் அடக்க முடியாது என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
கொழும்பு – நாரஹஹேன்பிட்டி அபயராம விகாரையின் விகாராதிபதியும் துறவிகள் குரல் அமைப்பின் தலைவருமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 17ஆம் திகதி முதல் இந்த நியமனம் அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் குரலை அடக்கும் நோக்கத்தில்தான் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக இவர் நியமிக்கப்பட்டார் என்று சில தரப்பினர் தெரிவிக்கின்றனர். எனினும், இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தப் பதவி ஜனாதிபதியின் விருப்பத்தின் பெயரில் தரப்பட்டது.
வேந்தர் பதவி மட்டுமல்ல இன்றும் பல பதவி நியமனங்கள் வழங்கப்பட்டாலும் எனது குரலை யாரும் அடக்க முடியாது. இவ்வாறான வரப் பிரசாதங்களுக்கும் நான் ஏமாந்தவன் அல்லன். எதனாலும் என்னை ஏமாற்ற முடியாது. எனது குரல் எப்போதும் ஓங்கி ஒலிக்கும். அது இன்றும், நாளையும் எப்போதும் மக்களுக்காக இருக்கும். தவறுகளைத் தட்டிக் கேட்பேன்; சுட்டிக்காட்டுவேன்” என்றார்.